மாதவரம்: மாத்துாரைச் சேர்ந்தவர் விஜய், 20; தனியார் நிறுவன ஊழியர். வீட்டருகே உள்ள தேவராஜ், 35, என்பவரிடம், வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. தேவராஜ், நேற்று முன்தினம் காலை, விஜயின் வீட்டிற்கு சென்று, பணத்தை கேட்டு தகராறு செய்துள்ளார்.
மனமுடைந்த விஜய், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாதவரம் பால்பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை, 11:00 மணிக்கு, விஜயின் உறவினர்கள், தேவராஜை கைது செய்யக் கோரி, மாத்துார் - பால்பண்ணை சாலை சந்திப்பில், திடீர் மறியலில் ஈடுபட்டதால், 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. புழல் உதவி கமிஷனர் ரவி மற்றும் போலீசார், பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து, கலைந்து சென்றனர்.
திருநங்கை தற்கொலை
ஆர்.கே.நகர்: கொருக்குப்பேட்டை, மீனம்பாள் நகரைச் சேர்ந்தவர் தாஜுதீன், 48. இவரது மகன் ஜாபர், 20; திருநங்கை. வீட்டில் இருந்தபடி, கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, குடிபோதையில் வீட்டிற்கு வந்த ஜாபர், நேற்று காலை, வெகுநேரமாகியும் கதவை திறக்காததால், தாஜுதீன், கதவை உடைத்து பார்த்ததில், அவர், துப்பட்டாவால் துாக்கிட்டு, தற்கொலை செய்தது தெரிந்தது. ஆர்.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
சாலை விபத்தில் முதியவர் பலி
பள்ளிக்கரணை: கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வீரராகவன், 75. நேற்று முன்தினம் இரவு, எஸ்.கொளத்துார் பிரதான சாலையை கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த பைக் ஒன்று, அவர் மீது மோதி, நிற்காமல் சென்றது.காயமடைந்தவரை, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, நேற்று மாலை இறந்தார். மவுன்ட் போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் துாக்கிட்டு தற்கொலை
அயனாவரம்: அயனாவரத்தைச் சேர்ந்தவர், ஹேமலதா, 25; எம்.சி.ஏ., பட்டதாரி. நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அயனாவரம் போலீசாரின் விசாரணையில், வேலை கிடைக்காத விரக்தியில், மன உளைச்சலில் காணப்பட்டுள்ளார். திருமணத்திற்கு, ஒரு மாதமே உள்ள நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.