சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி திருவிழா மே 12 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தார். 6ம் திருவிழாவாக கள்வன் திருவிழா நடந்தது.வெண்சாமரம் திருடிய கள்வனுக்கு தண்டனை வழங்கும் வகையில் இந்த விழா நடக்கிறது.சிவ ஆலயங்களில் சமணர்களை கழுவேற்றும் திருவிழா நடப்பது வழக்கம். உடல் முழுவதும் கரியை பூசியும், மணிக்கட்டு துண்டிக்கப்பட்டதை போல கள்வன் வேடமிட்ட ஒருவரை கோயிலுக்கு அழைத்து வந்து அங்கு கிராமத்தார்கள் கள்வனுக்கு மரியாதை செய்தனர். இதை தொடர்ந்து தீப்பந்தத்துடன் வரும் கள்வனை இளைஞர்கள் கோயில் வளாகத்தில் விரட்டும் நிகழ்ச்சி நடந்தது.கோயில் பின்புறம் மண்ணால் செய்யப்பட்ட கள்வன், கள்வச்சி சிலைகள் மீது ஆட்டுக்குடல்களை மாலையாக அணிவித்தும், தீப்பந்தங்கள் வைத்தும் வழிபாடு நடத்தப்பட்டது. தேரோட்டவிழாவின் போது இந்த கள்வன், கள்வச்சி சிலைகள் மீது தேர் சக்கரம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கும். கள்வனை கண்டால் திருஷ்டிகள் நீங்குவதாக கிராம மக்களின் நம்பிக்கை. இன்று இரவு புரவி எடுப்பு விழாவும், மே 20 தேரோட்டமும், மே 21ல் பூப்பல்லக்கு உற்ஸவமும் நடக்கிறது.