| 'மேட் இன் திருப்பூர்' எல்லாமே சாத்தியம் இங்கு! Dinamalar
'மேட் இன் திருப்பூர்' எல்லாமே சாத்தியம் இங்கு!
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
04:00

--எல்.உமாசங்கர்-'வெளிநாட்டுல வசிக்கிற உறவினருக்கு, திருப்பூர்ல இருந்துதான் டிரஸ் வாங்கி அனுப்பறேன். அவரோட நண்பர்களுக்கும், இங்கிருந்துதான் அனுப்ப சொல்றாரு' என்று சிலாகித்தார், அந்தப் பெரியவர்.'பாரீன்ல டூர் போனப்ப வாங்குனது' என்று ஏதாவது ஒரு பொருளைக் காட்டி, பெருமைப்பட்டுக் கொள்ளும் நம்மவர்கள், ஆடைகள் என்றால் மட்டும், 'மேட் இன் திருப்பூர்' என்று தலைநிமிர்ந்து சொல்கின்றனர்.அதற்குக் காரணம், திருப்பூரில் தயாராகும் ஆடைகளின் தரம் மற்றும் விலை. தரம் உயர்ந்திருந்தாலும், விலை அதிகம் இல்லை. தொழில் நெருக்கடிகளை சந்தித்துக்கொண்டே இருந்தாலும், அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல், அயராத உழைப்பு, திறன், தரம் மீது திருப்பூர் தொழில்துறையினர் தளராத நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.மேற்கத்திய நிறுவனங்களின் நெருக்கம்வால்மார்ட், எச் அண்ட் எம், ஸ்விட்சர், பிரீமார்க், பிலா, கேர்போர், சி அண்ட் ஏ, டாமி ஹிப்பிங்கர், மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் பெயர், திருப்பூரில் பணிபுரியும் தொழிலாளர்களில் எத்தனை பேருக்குத் தெரியுமோ தெரியாது. ஆனால், மேற்கத்திய சங்கிலித்தொடர் வர்த்தக நிறுவனங்களான இவையெல்லாம், திருப்பூருடன் நெருக்கம் கொண்டவையாக இருக்கின்றன.இவை உலகம் முழுக்க வர்த்தக வலைப்பின்னல் கொண்ட நிறுவனங்கள். எல்லா நொடிகளிலும், எங்கோ ஒரு மூலையில், ஏதோ ஒரு தொழிலாளி, வெளிநாட்டினர் அணிவதற்கான ஆடைகளைத் திருப்பூரில் தயாரித்துக்கொண்டிருப்பார் என்பது நிச்சயம்.சவாலே... சமாளி!சீனா, வியட்நாம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள், தொழிலாளர் கூலி உள்பட எல்லா துறைகளிலும் உற்பத்திச்செலவைக் குறைத்து, ஆடை ஏற்றுமதியில் கோலோச்ச விரும்பினாலும், இதில் வென்றெடுத்து, பின்னலாடை ஆர்டர்களை, திருப்பூர் தக்க வைக்கிறது என்பது சாமர்த்தியமானது மட்டுமல்ல; சவால் மிக்கதும் கூட.'திருப்பூரில் உள்ள எந்த நிறுவனம் சிறந்த டி-சர்ட்டைத் தயாரிக்கிறது?' என்று பொது அறிவு வினா போன்று கேள்வி எழுப்புபவர்கள் பலர். இந்தக் கேள்விக்கான விடையை இணையதளத்தில் பதிவாக்கியிருக்கிறார் ஒரு பெண் தொழிலதிபர்.'திருப்பூரில் உள்ள ஒவ்வொரு உற்பத்தியாளரும், தங்களுக்கே உரிய தனித்துவத்துடன் டி-சர்ட்களைத் தயாரிக்கின்றனர். பேசிக் ஸ்டைலை எளிதாகத் தயாரிக்கின்றனர். தேவைக்குத் தகுந்தது போன்று, உரிய டி-சர்ட் தயாரிப்பாளரைத் தேடிக் கண்டறிவது சிரமமானதுதான். ஆன்லைன், வெப்சைட்டில் தேடல், முகவரியைச் சேகரித்தல், நேரடியாக ஆலைக்கே சென்று பார்த்தல் போன்றதோடு நில்லாமல், ஆர்டர்களை உரிய நேரத்தில் முடித்துக்கொடுக்கும் திறன் உள்ள ஆலையா அது என்று கண்டறிந்து ஆர்டர்களைத் தருவதே மெகா வேலைதான்.எங்கள் நிறுவனத்திற்கு வந்தால், உங்களுக்குத் தேவையான ஆடைகளை நீங்கள் விரும்பிய வகையில் செய்து தரத் தயாராக இருக்கிறோம்...'இப்படி, அந்த பதில் விரிகிறது.சாம்பிள் தயாரிப்புவர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிறுவனத்தினர், சாம்பிள்களை முதலில் அனுப்புவர். அவற்றைத் தயாரித்து உற்பத்தியாளர்கள் அனுப்பிய பின்தான், ஆர்டர்களை இவர்கள் வழங்குவது வழக்கம்.சாம்பிள்கள் என்றால், முன்பே தயாரிக்கப்பட்ட ஆடை அல்ல. அது வெறும் கம்ப்யூட்டர் வரைபடமாகக் கூட இருக்கலாம்.சாம்பிள்களை ஆடையாக உருவாக்குதல், கனவை நனவாக்குவது போன்று கடினமான இலக்கு. கனவுகளுக்கு எல்லையில்லை. ஆனால், அவை நனவாகும்போது எல்லை கட்டிக்கொள்ளும். ஆனால், எல்லைகளைத் தகர்த்தால்தான், சாம்பிள் ஆடையாக மலரும். இதற்கு அதிக காலத்தையும், உற்பத்தியாளர்களால் எடுத்துக்கொள்ள முடியாது. சாம்பிள் தயாரிப்பு சிறந்திருந்தாலும், அது ஆர்டராக மலராமல் போவதும் உண்டு. இதில் சோர்ந்து போகாமல், மலர்ச்சியுடன் அடுத்த சேம்பிளைத் தயாரிக்கும் உற்பத்தியாளரே வெற்றிப்படிக்கட்டைத் தொடுகிறார்.சிறு நிறுவனங்கள் எனினும்...1996ல் இந்தியாவில் தயாராகும் பின்னலாடைகளில் 75 சதவீதம் திருப்பூரில் இருந்துதான் ஏற்றுமதியானது. உள்நாட்டு ஆடைகளிலும் 35 சதவீதம், பங்கு வகித்தது. இதுதான், 'ஏற்றுமதிச் சிறப்பு நகராக' மத்திய அரசு திருப்பூரை அங்கீகரித்ததற்கு முக்கியக் காரணம்.பேப்ரிகேஷன், பிராசசிங், ஸ்டிச்சிங் என்று அனைத்தும் இணைந்த தொழிற்கூடங்கள் பல, திருப்பூரில் உருவாகிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக மெகா ஆர்டர்களைத் தயாரிக்கும் பணியை எளிதாக்குவதற்கு, பிரமாண்டமான ஆலைகள் தேவை. இருப்பினும், சிறு, குறு ஆலைகள்தான், முதுகெலும்பாக இன்னும் இருக்கின்றன.'ஜாப் ஒர்க்' மூலம் பணிகள் பிரித்து வழங்கப்படுவதால், எவ்வளவு பெரிய ஆர்டரையும் விரைவில் செய்து முடித்து விடுகின்றனர்.சாய ஆலைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு பிரச்னை எழுந்து, பாதகமான நிலை ஏற்பட்டபோது, தொழில்துறையினர் சற்றுத் திணறித்தான் போயினர். ஆனால், இதுதான், சுமார் 10 கோடி லிட்டரைத் தினமும் சுத்திகரித்து, மீண்டும் பயன்படுத்தும் வல்லமையைத் திருப்பூர் பெறுவதற்குக் காரணமாக அமைந்தது.தற்போது, நாட்டில் 90 சதவீதம் பின்னலாடைகள், திருப்பூரில் இருந்துதான் ஏற்றுமதியாகிறது. உள்நாட்டு ஆடைத் தயாரிப்பின் பங்களிப்பிலும் பெரும் சதவீதத்தைத் திருப்பூர் பெற்றிருக்கிறது.பழமையில் இருந்து...பின்னலாடைத் தொழில்நுட்பங்களில் நவீனங்கள் பெருகிய போதும், இன்னும் நவீனங்கள் பெருக வேண்டியிருக்கிறது. இதற்காக, 59 நிமிடத்தில் கடன் அனுமதித் திட்டம் போன்றவற்றை மத்திய அரசு கொண்டுவந்தது. இன்னும், இத்திட்டத்தை திருப்பூர், சிறப்பான வகையில் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றுதான் கூற வேண்டும். அதேசமயம், இதன் சிறப்பை உணர்ந்து பயன்படுத்திக்கொண்டு வருபவர்கள் பலர். பழமையான இயந்திரங்களை நவீனமயமாக்கிக்கொள்வதற்கான வாய்ப்பு, இதன் மூலம் எளிதாகக் கிடைக்கிறது. இத்திட்டத்தைப் பயன்படுத்தி உயர்ந்திருக்கும் தொழில்முனைவோர் ஏராளமானோர்.திருப்பூரில் அவ்வப்போது வர்த்தகக் கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். மெஷின்களுக்கான கண்காட்சி ஒன்றில், வெளிநாட்டு மெஷின்களுக்கு மத்தியில், நமது நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட, ஆடை உற்பத்தி துறைக்கான மெஷின்களும் அதிகளவில் இடம் பெற்றன. 'மேக் இன் இந்தியா' திட்டத்தில், பிரிண்டிங் மெஷின்களை உற்பத்தி செய்து, மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சந்தைப்படுத்தி வருகிறது. உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும், மெஷின்களை அந்த நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது. வெளிநாட்டு மெஷின்கள் போலவே, ஆடைகளில் மிக துல்லியமாக பிரிண்டிங் செய்யும் நுட்பம் மற்றும் சிறந்த தரத்தில் இருந்த இந்த மெஷின், வெளிநாட்டு நிறுவனங்களைவிட, குறைந்த விலையில் மெஷினை விற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மெஷின், கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது. பின்னலாடைத்துறையினரின் பாராட்டையும் பெற்றது.உற்பத்தி நிறுவனமாகட்டும்; பொருட்களைப் பெறக்கூடிய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களாகட்டும்; 'மேக் இன் இந்தியா' திட்டம், வரமாக அமைந்திருக்கிறது என்றால் மிகையில்லை.எந்த மூலைக்கும்...பரந்து விரிந்தது உலகம்.ஆனால், தொழில்நுட்பத்தால் சுருங்கியிருக்கிறது. இதனால், புதிய மார்க்கெட் வாய்ப்புகள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. பழைய வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாக்கும் அதேசமயம், புதிய வாய்ப்புகளை பற்றிக்கொள்வதே திருப்பூர் தொழில்துறையின் சிறப்பு. வாய்ப்புகள் எட்டிப் பார்க்கும்போதெல்லாம், தட்டி விடுவதில்லை. இதனால்தான், எட்டா உயரத்தையே என்றும் இலக்காக்கி, சிறகை விரித்துக்கொண்டே இருக்கிறது, திருப்பூர்!மேக் இன் இந்தியாசர்வதேச அளவில் நமது நாட்டை மாபெரும் உற்பத்தி மையமாக்கும் திட்டம்தான், 'மேக் இன் இந்தியா'. நாட்டின் மொத்த உற்பத்தியில், உற்பத்தி சதவீதம் என்பது மிகவும் குறைவு.ஜவுளி உள்ளிட்ட 25 துறைகளுக்கான முதலீட்டை ஈர்த்து, அதன்மூலம் உற்பத்தித் துறையை மேம்படுத்துதலே, மத்திய அரசின் திட்டம்.நாட்டில் உற்பத்தியாகும் எந்த ஒரு பொருளும் 100 சதவீதம் தரம் நிறைந்ததாகவும், சுற்றுச்சூழலுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படுத்தாத தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்டதாகவும், வேலைவாய்ப்பை அதிகளவில் வழங்கக்கூடியாதகவும் இருக்க வேண்டும் என்பது, திட்டத்தின் நோக்கம். உலகின் உற்பத்தி மற்றும் நுகர்வில், இந்தியா மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது.இவற்றை நோக்கும்போது, திருப்பூர், 'மேக் இன் இந்தியா' திட்டத்தை பல ஆண்டுகள் முன்பிருந்தே சுயமாகத் துவக்கிய பெருமையைக் கொண்டது என்பது புரியும். உள்நாட்டில் விற்கப்படும்போது, ஆடைகளில் 'மேட் இன் திருப்பூர்' என்று குறிப்பிடப்படுவது வாடிக்கையாக இருக்கிறது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X