பரமக்குடி : பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட புதுநகரில் அமைக்கப்பட்ட பூங்கா பயன்படுத்தாமலேயே பாழடைந்து வீணாகியுள்ளது.
நகர் கட்டமைக்கப்படும் போது அடிப்படை வசதிகள் என சில இடங்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். இதன் படி ஒவ்வொரு பகுதியிலும் சிறுவர்கள் தொடங்கி மக்கள் சந்தோஷமாக கூடும் இடமாக பூங்காவிற்கு, எனஇடம் ஒதுக்கியுள்ளனர்.தற்போது பல பகுதிகளில் பூங்கா இடமானது ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதுடன், பல பூங்கா இடங்கள் சுவடு தெரியாமல் உள்ளன. இந்நிலையில் பரமக்குடி நகராட்சி 1 வது வார்டில் அமைக்கப்பட்ட பூங்கா தொடர்ந்து பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே வைத்திருந்தனர்.சிறுவர்கள் கோடை விடுமுறையில் விளையாட முடியாமல் சிரமப்படுகின்றனர். பெரியவர்களுக்கான நடைமேடை உடைந்து வீணாகியுள்ளது. தொடர்ந்து ஊஞ்சல், சறுக்கு, என அனைத்து கம்பிகளும் துருப்பிடித்து உடைந்து பயன்படுத்தமுடியாத சூழலில் உள்ளது.இதற்கிடையே நகரில் ஆங்காங்கே காய்கறி கழிவுகளைக்கொண்டு உரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான குப்பைத்தொட்டியை இதே பூங்காவில் வைத்து நகராட்சி அதிகாரிகள் அழகு பார்க்கின்றனர்.ஆகவே விடுமுறை நாட்களில் மழலைகளின் மனஉளைச்சலை தீர்க்கும் வகையில் அனைத்து பூங்காக்களையும் சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.