பரமக்குடி : பரமக்குடி வைகை ஆற்றில் பரவி வரும் சாக்கடை கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய்பரவும் நிலை உள்ளது.
பரமக்குடி நகர் வைகையாற்றையொட்டி அமைந்துள்ளது. இதன்படி எமனேஸ்வரம் 8 வார்டுகள் உட்பட மொத்தமுள்ள 36 வார்டுகளில் 20 க்கும் மேற்பட்ட வார்டுகள் ஆற்றையொட்டி உள்ளது.இப்பகுதிகளில் இருந்து வீடுகள் மற்றும் வணிகநிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக வைகை ஆற்றில் கலக்கும் படி நகராட்சியினர் விட்டுள்ளனர். ஆங்காங்கே மிகப்பெரிய குளங்களாக ஆற்றில் கழிவுநீர் தேங்கி, ஊற்று நீருக்கு சவாலாக இருந்து வருகிறது. இந்நிலையில் சுமார் 2 அடி தொடங்கி 5 அடிக்கும் மேல் பள்ளங்களில் கழிவுநீர் குட்டைகள் உருவெடுத்துள்ளது.இதன் காரணமாக தொடர்ந்து பரமக்குடியில் நடந்து முடிந்த சித்திரைத்திருவிழா காலங்களில் நகராட்சி அதிகாரிகள் சீரமைத்தனர்.
மேலும் மே 17 தொடங்கி வைகை ஆற்றில் வைகைசி வசந்தோற்ஸவ விழா நடக்கவுள்ளது. இதற்காக சுவாமி பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளவுள்ளார்.ஆற்றில் மண்டகப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் அருகிலேயே சாக்கடை கழிவுகள் மணலோடு மணலாக பள்ளங்களில் பரவி புதைகுழிகளாக உள்ளன. சுகாதாரக்கேடும், நோய்பரவும் நிலை உள்ளது.இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. ஆகவே நகராட்சி நிர்வாகம் ஆற்றில் உள்ள கழிவுநீர் பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.