ஊட்டி: பழங்குடியினர் உற்பத்தி செய்யும் பொருட்களை நடப்பாண்டில், 100 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையம் வளாகத்தில் கோடை சீசனை முன்னிட்டு, மலை வாழ் மக்களின் கைவினை பொருட்கள் விற்பனை துவக்கப்பட்டுள்ளது. 27ம் தேதி வரை நடக்கிறது. இங்கு, 70 கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, மலை வாழ் மக்கள் மேம்பாட்டு இணையம் மண்டல மேலாளர் ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:மலை வாழ் மக்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்தி வருமானத்தை பெருக்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய மலை வாழ் மக்கள் அமைச்சகம் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும், 15 மண்டல அலுவலகத்தின் கீழ், 104 கடைகள் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில், 8 கடைகள் உள்ளன. கடைகளில் எண்ணிக்கை, 150 ஆக உயர்த்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில், இதுவரை, 45 கோடி ரூபாய் அளவுக்கு பழங்குடியினர் உற்பத்தி செய்த பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் அளவை, 100 கோடி ரூபாய்க்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் துவக்க நாளில், 2 லட்சம் ரூபாய்க்கு பொருட்கள் விற்பனையாகி உள்ளது. 60 லட்சம் ரூபாய்க்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, ராமநாதன் கூறினார்.