குன்னுார்: குன்னுார் - ஊட்டி சாலையில், அருவங்காடு பகுதியில் கார்டைட் தொழிற்சாலை மற்றும், 5 பள்ளிகள் உள்ள நிலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர், ஊழியர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் சாலையை கடந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு இறுதியில், அதிவேகத்தில் வந்த கார், சாலையை கடந்த மாணவ, மாணவியர் மீது மோதியதில் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து, இங்கு 'ஷீப்ரா கிராசிங்' வேகத்தடை அமைக்கவும், சிக்னல் அமைக்கவும் மாவட்ட எஸ்.பி., சண்முகப்பிரியா உத்தரவிட்டார். இதன் முதற்கட்டமாக சிக்னல் அமைக்கப்பட்டது.ஆனால், வேகத்தடை அமைக்காததால், தினமும் மாணவ, மாணவியர் உட்பட அனைவரும் அச்சத்துடன் நடந்து வருகின்றனர்.
இந்நிலையில், கோடை சீசனையொட்டி, நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை போக்குவரத்தை முறையாக டிரைவர்கள் கடைபிடிக்கும் வகையில், வெள்ளை பெயின்ட் அடிக்கும் பணி நடந்தது.தொடர்ந்து, போலீசார் அறிவுறுத்தலின் பேரில், அருவங்காடு மெயின் கேட் பகுதியில், மக்கள் சாலையை கடக்க உதவும் வகையில், வெள்ளை பெயின்ட் அடிக்கப்பட்டது.மக்கள் கூறுகையில், 'இங்கு மாவட்ட எஸ்.பி., உத்தரவை நிறைவேற்றும் வகையில், 'ஷீப்ரா கிராசிங்' முறையில் வேகத்தடை அமைக்கவும், 'ஸ்கூல் ஸோன்' என்ற வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும்.' என்றனர்.