| 'மொபைல் கவுன்சிலிங்'! போலீசாரின் மன அழுத்தம் போக்க... குறைகளை சொல்ல அழைப்பு Dinamalar
'மொபைல் கவுன்சிலிங்'! போலீசாரின் மன அழுத்தம் போக்க... குறைகளை சொல்ல அழைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:46

திருப்பூர் : 'திருப்பூர் மாநகர போலீசில், போலீசாரின் மன அழுத்தம் போக்க, மாவட்ட, மாநகர காவல் துறை ஆர்வம் காட்ட வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



திருப்பூர் மாநகர போலீசில் சமீபகாலமாக தற்கொலை, தற்கொலை முயற்சி அதிகரித்து வருகிறது; இது போலீசாரை மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தினரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் ஏராளமான போலீசார் பணியாற்றுகின்றனர்.



இவர்களில் பலர் சர்க்கரை நோய், சுவாச கோளாறு, ரத்த கொதிப்பு, மன அழுத்தம் மற்றும் பணிச்சுமை போன்ற பிரச்னைகளில் அவதிப்பட்டு வருகின்றனர். சிலர் தங்களது பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை முடிவை நாடுகின்றனர்.



சில மாதம் முன்பு, மாநகரில் ஐ.எஸ்., பிரிவில் இருந்த செந்தில்குமார், வீட்டில் துாக்குமாட்டி இறந்தார். மாநகர ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்த போலீஸ்காரர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த, 3ம் தேதி மாவட்ட ஆயுதப்படை போலீஸ் பிரிவில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த பர்வீன்பாபி, விஷமருந்தி தற்கொலை செய்தார். கடந்த வாரம், மாநகர ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றி வந்த பெண் போலீஸ், தற்கொலைக்கு முயற்சி செய்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



நேற்று முன்தினம், கோவைப்புதுாரில் நான்காவது பட்டாலியன் பிரிவில் போலீசாக வேலை பார்த்து வரும், மாரிக்கண்ணு, 24 என்பவர், அளவுக்கு அதிகமாக துாக்க மாத்திரை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்று, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 'குழந்தைக்கு உடம்பு சரியில்லை' எனக்கூறி அவர் விடுப்பு கேட்டதாகவும், அதிகாரிகள் மறுத்ததால், மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் கூறப்படுகிறது.



இத்தகைய தொடர் அசம்பாவிதங்களுக்கு பின், போலீஸ் உயரதிகாரிகள், போலீசாரை அவர்களின் குறை கேட்பதும், மன அழுத்தம் போக்க பயிற்சியளிப்பதும், ஏதோ 'கணக்கு' காண்பிக்கும் செயலாகவே உள்ளது. மாறாக, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதாக இல்லை.சில மாதம் முன்பு, தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் இணைந்து, போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்க, பிரதி வாரம் மூன்று நாள் என்ற அடிப்படையில், நிறை வாழ்வு பயிற்சியளிக்கப்பட்டது; இது, எதிர்பார்த்த பலன் தரவில்லை என்பது, போலீசாரின் கருத்து.



எப்போதும் அணுகலாம்...


மாநகர துணை கமிஷனர் உமா கூறுகையில்,''நிறைவாழ்வு பயிற்சி மற்றும் கவுன்சிலிங் மூலம் போலீசாரின் குறை கேட்கப்பட்டு வருகிறது. குடும்ப பிரச்னை மற்றும் வேறு ஏதாவது பிரச்னை இருந்தால், மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், உள்ள 'மொபைல் கவுன்சிலிங்' மூலம் தீர்வு காணலாம்,'' என்றார்.



எஸ்.பி., கயல்விழி கூறுகையில், ''போலீசாரின் மன அழுத்தம் போக்க நிறைவாழ்வு பயிற்சி, கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட முகாமில் பங்கேற்றவர்களில், ஏழு பேர் தங்களின் குடும்ப பிரச்னைக்கு, கவுன்சிலிங் மூலம் தீர்வு பெற்றுள்ளனர். போலீசார், தங்களின் குறைகளை எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம்,'' என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X