சிக்கல் : கோடை வெப்பம் காரணமாக நீர் நிலைகள் வறண்டதால், கால்நடைகள் தண்ணீருக்காக தவித்து வருகின்றன.
சிக்கல், கொத்தங்குளம், கீழச்செல்வனுார், மேலச்செல்வனுார்,வாலிநோக்கம், மாரியூர், மேலக்கிடாரம், கீழக்கிடாரம் உள்ளிட்ட இடங்களில் ஊரணி, குளங்கள் உள்ளிட்டவைகள் கோடை வெப்பத்தால் வறண்டு காணப்படுகிறது.கிராமப்பகுதிகளில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு தண்ணீரை வழங்கமுடியாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
நிலத்தடி நீர் கடும் உவர்ப்பு தன்மை கொண்டாக உள்ளதால்,ஊரணிக்கரையோரம் தோண்டப்பட்ட கிணற்றில் புழக்கத்திற்கான உவர்ப்பு நீர் மட்டுமே கிடைக்கிறது. வாட்டி எடுக்கும் கோடைவெயிலால் கிணற்றிலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது.மேலக்கிடாரம் விவசாயி செந்தில்குமார் கூறியதாவது: கோடை உழவிற்கு பின்னர் விளைநிலங்களில் ஆட்டுக்கிடை அமைத்து வருகின்றனர்ஒரே சமயத்தில் 100 முதல் 200 ஆடுகளுக்கும், தண்ணீர் கிடைப்பது அரிதாக உள்ளது.
ஆடுகளுக்கு உடல் எடைக்குறைபாடும், கோடைகால நோய் தாக்குதலுக்கும் உள்ளாகிறது. தண்ணீருக்காக மனிதர்களே நாள்தோறும் அலைந்து திரிந்து தள்ளுவண்டியில் சேகரித்து வரும் நிலையில், கால்நடைகளின் நிலை பரிதாபமாகவே உள்ளது, என்றார்.