சென்னை:சரக்கு லாரி மாயமான விவகாரத்தில், காப்பீட்டு நிறுவனம், பாலிசிதாரருக்கு, 11 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தர விட்டது.
சென்னை, கொருக்குப்பேட்டை, திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த, ராஜேந்திரன், 50, என்பவர், சரக்கு லாரி வைத்திருந்தார்.தனியார் காப்பீட்டு நிறுவனத்தில், அதற்கு பாலிசியும் உள்ளது. லாரியில் கோளாறு ஏற்பட்டதால், மஞ்சம்பாக்கத்தில் உள்ள, 'ஒர்க்ஸ் ஷாப்'பில் சரி செய்ய கொடுத்தார். அப்போது, லாரி மாயமானது. போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.உரிய இழப்பீடு வழங்க, காப்பீட்டு நிறுவனத்துக்கு, ஆவணங்களுடன் விண்ணப்பித்தும், இழப்பீடு கிடைக்கவில்லை.லாரிக்கான தொகை, 14.73 லட்சம் ரூபாயுடன், சேவை குறைபாட்டுக்கு, 2 லட்சம் ரூபாய், மன உளைச்சலுக்கு, 2 லட்சம் ரூபாய் வழங்க, சென்னை மாவட்ட, வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தார். 2016ல் இருந்து, வழக்கு நடந்து வந்தது.
விசாரணையில், 'தாமதமாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோரிக்கையில் நம்பகத்தன்மை இல்லை; வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, காப்பீட்டு நிறுவனம் தெரிவித்தது.வழக்கில் நீதிபதி லட்சுமிகாந்தம், நீதித்துறை உறுப்பினர், ஜெயந்தி பிறப்பித்த உத்தரவு:காப்பீட்டு நிறுவனத்தின் சேவையில், குறைபாடு உள்ளது. மனுதாரருக்கு, லாரிக்கு, 11 லட்சம் ரூபாய் திரும்ப வழங்குவதுடன், 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு, 5,000 ரூபாய் வழக்கு செலவு என, மொத்தம், 11 லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய், நிறுவனம் வழங்க வேண்டும்.இவ்வாறு, உத்தரவிடப்பட்டது.