செங்குன்றம்:
குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால், அதை பயன்படுத்த முடியாமல், பொதுமக்கள் தவிக்கின்றனர்.
சென்னை செங்குன்றம், நாரவாரிக்குப்பம், சுப்ரமணிய பாரதியார் தெருவில் உள்ள, பொது குழாய்களில், 16ம் தேதி முதல், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது.அழுக்கு நுரை, துர்நாற்றத்துடன் வரும் நீரை பயன்படுத்த முடியாமல், அங்கு வசிப்போர், குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து, அங்குள்ளவர்கள், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி அலுவலகத்தில் புகார் செய்தனர்.மேலும், கழிவுநீர் கலந்த குடிநீரை, பாட்டிலில் எடுத்து சென்று, அங்குள்ள அதிகாரிகளிடம் கொடுத்தனர்.ஆனால், அதிகாரிகள், குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.