| பொள்ளாச்சி ரயில் வழித்தடங்கள்... விரைவில் மின்மயம்! தெற்கு ரயில்வே அறிவிப்பால் மகிழ்ச்சி Dinamalar
பொள்ளாச்சி ரயில் வழித்தடங்கள்... விரைவில் மின்மயம்! தெற்கு ரயில்வே அறிவிப்பால் மகிழ்ச்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:13

பொள்ளாச்சி : பொள்ளாச்சி ரயில் பாதைகளை மின் மயமாக்கும் திட்டத்தை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு, ரயில்வே ஆர்வலர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.



தெற்கு ரயில்வே நடப்பு, 2019 - 20 நிதியாண்டில், 1,166 கி.மீ., ரயில் பாதைகளை மின்மயமாக்க திட்டமிட்டுள்ளது. இவை மொத்தம் ஒன்பது திட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள், திண்டுக்கல் - பாலக்காடு (179 கி.மீ.,) பொள்ளாச்சி - போத்தனுார் (40 கி.மீ.,) மற்றும் விருதாச்சலம் - கடலுார் துறைமுகம் (57 கி.மீ.,) ஆகிய மூன்று திட்டங்களை நடப்பாண்டில் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஆரம்ப கட்ட நிதியாக, 45 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகள் துவங்கிய பின், ஒவ்வொரு பகுதியாக நிதி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.



மேலும், இத்திட்ட பணிகளை மேற்கொள்ள, ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு, ஒப்பந்தமும் அளிக்கப்பட்டு விட்டது. இரண்டு மாதங்களில் பணிகள் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பொள்ளாச்சியை பிற நகரங்களுடன் இணைக்கும் ரயில் பாதை மின்மயமாக்கப்படுவதால், பல்வேறு நன்மைகள் கிடைக்கும். ரயில்கள் இயக்குவதற்கான செலவு, 15 சதவீதம் குறையும்.இந்த வழித்தடங்களில், ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். குறிப்பாக, பொள்ளாச்சி - கோவை வழித்தடத்தில், பஸ் சேவையை போல எதிரெதிர் மார்கங்களில் அடுத்தடுத்து பயணிகள் ரயில்கள் இயக்கப்படும்.



இதன் மூலம், இரு நகரங்களுக்கு இடையே பயண நேரம், செலவு குறையும்; இரு நகரங்களும் இணைக்கப்படும்.இப்படி, போக்குவரத்து எளிதாவதன் மூலம், கல்வி, தொழில் வாய்ப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மக்களுக்கு மேம்பாடு கிடைக்கும்.மேலும், பொள்ளாச்சி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள பல்வேறு ரயில்கள் இயங்க துவங்கும். எதிர்காலத்தில், தென்மாவட்டங்கள் - கோவை - கேரளா -- கொங்கன் பகுதி - மகாராஷ்டிரா பகுதிகள் ரயில்கள் மூலம் இணைக்கப்படும்.



இதன் மூலம், ஆன்மிக, சுற்றுலா மற்றும் வணிக பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து, பொள்ளாச்சியின் வர்த்தகம், பொருளாதாரம், சுற்றுலா வளர்ச்சியடையும்.இதனால், மின்மயமாக்கல் திட்டத்துக்கு பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்கம் மற்றும் ரயில்வே ஆர்வலர்கள் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X