| முகநுால் மூலம் மாணவர் சேர்க்கை: வழிகாட்டுகிறது நகராட்சி பள்ளி Dinamalar
முகநுால் மூலம் மாணவர் சேர்க்கை: வழிகாட்டுகிறது நகராட்சி பள்ளி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:13



பல்லாவரம்: ல்வேறு சாதனை படைத்து வரும், பல்லாவரம் நகராட்சி தொடக்கப் பள்ளி, மற்ற பள்ளிகளுக்கு வழிகாட்டும் விதமாக, முகநுால் வாயிலாக, மாணவர் சேர்க்கை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.



பல்லாவரம் நகராட்சியில் அடங்கிய, ஜமீன் பல்லாவரம், பொன்னியம்மன் கோவில் அருகே, நகராட்சி தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது.திரிசூலம், கீழ்க்கட்டளை, பல்லாவரம் பகுதிகளைச் சேர்ந்த, 585 பேர் படிக்கின்றனர். தமிழ், ஆங்கில வழி கொண்ட இப்பள்ளியில், மாணவர்களின் வசதிக்காக, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கண்காணிப்பு கேமரா, செயல்வழி கற்றல், இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 'ஸ்மார்ட் கிளாஸ்' உள்ளிட்ட வசதிகள் உள்ளன.கல்வியிலும் விளையாட்டிலும், இப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து வருகின்றனர். கராத்தே, கேரம், யோகா, பரத நாட்டியம், சிலம்பம் போன்ற வகுப்புகள் நடத்தப்படுகின்றன.கராத்தே போட்டியில், இப்பள்ளி மாணவர்கள், மாவட்ட - மாநில, தென் இந்திய அளவில், பல பதக்கங்களை பெற்றுஉள்ளனர்.



சமீபத்தில், இவர்கள், இலங்கையில் நடந்த சர்வதேச போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.தங்கள் குழந்தைகளை, இப்பள்ளியில் சேர்க்க, பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தாண்டு, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, முன்னாள் மாணவர்கள், பெற்றோர் உதவியுடன், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.'அரசு பள்ளி இருக்க... வேறு பள்ளி எதற்கு...' என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டி மூலமும், முகநுால் மூலமும், மாணவர் சேர்க்கை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இதன் காரணமாக, இதுவரை, 146 மாணவர்கள் இப்பள்ளியில் சேர்ந்துள்ளனர். இப்பள்ளி போல், மற்ற நகராட்சி பள்ளிகளும் முயற்சி செய்தால், அரசு பள்ளியில் சேரும் மாணவர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X