ஊட்டி:ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மலர் கண்காட்சியை, மூன்று நாட்களில், 1.05 லட்சம் சுற்றுலா பயணியர் பார்வையிட்டனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில், 17ல் துவங்கிய மலர் கண்காட்சி, 22ல் நிறைவடைகிறது. பல வண்ண மலர்கள், வெவ்வேறு வகையான அலங்காரங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன.குறிப்பாக, ஹாலந்து நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட, 3,000, 'துலிப்' மலர்கள், சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்தன.நேற்று சுற்றுலா பயணியர் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் அதிக எண்ணிக்கையில் வருகை தந்தனர்.இன்னிசை கச்சேரியின்போது, பாடல்களுக்கு ஏற்ப நடனமாடி மகிழ்ந்தனர். மலர்களின் முன் நின்று, புகைப்படம் எடுக்க, சுற்றுலா பயணியர் அதிகம் ஆர்வம் காட்டினர். துவக்க நாளான, 17ல், 26 ஆயிரம் பேர், 18ல், 35 ஆயிரம் பேர் வருகை தந்தனர்.நேற்று காலை முதலே, கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பூங்காவில், புல்தரை மைதானத்தில் சுற்றுலா பயணியர் குழுமியிருந்தனர். நேற்று, 44 ஆயிரம் பேர் வருகை புரிந்தனர் என, தோட்டக்கலை துறையினர் தெரிவித்தனர்.