சிவகங்கை : ''பள்ளி அங்கீகார விபரத்தை கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையத்தில் பதிவேற்றியதை உறுதி செய்யும் பொருட்டு, தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று முதல் 22 வரை நடக்கிறது,'' என சிவகங்கை முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:மாவட்டத்தில் நர்சரி, தொடக்க பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர மொழி வழியில் வகுப்புகள் துவக்க அரசின் அங்கீகாரம் பெற்றதற்கான விபரங்களை கல்வி தகவல் மேலாண்மை இணையத்தில் சரியாக பள்ளிகள் பதிவேற்றம் செய்யாமல் விடுபட்டுள்ளது.
இதை முழுமையாக செய்து முடிக்க பள்ளிகல்வி இயக்குனர் உத்தரவிட்டார். இயக்குனர் ஆலோசனைபடி சிவகங்கை ஆக்ஸ்வர்ட் மெட்ரிக் பள்ளியில் இன்று காலை 10:00 மணிக்கு மானாமதுரை, இளையான்குடி ஒன்றிய பள்ளிகள், பகல் 2:00 மணிக்கு சிவகங்கை, திருப்புவனம் ஒன்றிய பள்ளிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடக்கும்.மே 21 காலை 10:00 மணிக்கு திருப்புத்துார் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் மெட்ரிக் பள்ளியில் திருப்புத்துார், சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றிய பள்ளிகளுக்கும், பகல் 2:00 மணிக்கு கல்லல் ஒன்றிய பள்ளிகளுக்கும் நடக்கிறது.
மே 22 காலை 10:00 மணிக்கு காரைக்குடி டி.டி.நகரில் உள்ள மகரிஷி வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளியில் தேவகோட்டை, கண்ணங்குடி, காளையார்கோவில் ஒன்றிய பள்ளிகளுக்கும், பகல் 2:00 மணிக்கு சாக்கோட்டை ஒன்றிய பள்ளிகளுக்கும் நடக்கும். இதில் பங்கேற்கும் தலைமை ஆசிரியர்கள் பள்ளி நில உரிமைக்கான பத்திர நகல், கட்டட உறுதி சான்று நகல், தீயணைப்பு, சுகாதாரத்துறை சான்று, பள்ளி துவங்குவதற்கு பெற்ற அனுமதி, வகுப்புகள் துவக்க அரசு அளித்த அங்கீகார உத்தரவு நகல் போன்ற விபரங்களுடன் கலந்து கொள்ள வேண்டும், என்றார்.