| மேம்பாலத்தில் பறக்கும் பஸ்கள்; பஸ் ஸ்டாண்டில் பயணிகள் ஏமாற்றம்; கிணத்துக்கடவில் காத்திருக்கும் பயணிகள் Dinamalar
மேம்பாலத்தில் பறக்கும் பஸ்கள்; பஸ் ஸ்டாண்டில் பயணிகள் ஏமாற்றம்; கிணத்துக்கடவில் காத்திருக்கும் பயணிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:16

கிணத்துக்கடவு : பொள்ளாச்சி - கோவை நான்கு வழிச்சாலை திட்டத்தில், கிணத்துக்கடவுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு, வாகனங்கள் மேம்பாலம் வழியாக செல்கின்றன. இதில், அரசு மற்றும் தனியார் பஸ்கள் கட்டாயம் கிணத்துக்கடவு சர்வீஸ் ரோடு வழியாக பஸ் ஸ்டாண்ட் வந்து, பயணிகளை ஏற்றியும், இறக்கியும் விட வேண்டும்.



ஆனால், அரசு மற்றும் தனியார் பஸ்கள் பெரும்பாலும் பஸ் ஸ்டாண்ட் வராமல், மேம்பாலத்தின் வழியாக, கோவை, பொள்ளாச்சி நோக்கி செல்கின்றன. இதனால், பஸ் ஸ்டாண்டில் கோவை, பொள்ளாச்சி செல்லும் பயணிகள், பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.சில அரசு மற்றும் தனியார் பஸ்கள், கிணத்துக்கடவுக்குள் செல்வதில்லை. இதனால், கிணத்துக்கடவு செல்லும் பயணிகள் பஸ்சில் ஏற வேண்டாம், என, பயணிகளிடம் தெரிவித்து பஸ்களில் அனுமதிப்பதில்லை. இதனால், கிணத்துக்கடவு பயணிகள் பொள்ளாச்சி, கோவை பஸ்ஸ்டாண்டில், அரசு மற்றும் தனியார் பஸ் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.



இதனால், பயணிகள் சரியான நேரத்திற்கு வேலைக்கும், வீட்டுக்கும் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர், பஸ் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.பஸ் ஸ்டாண்ட் வராமல், மேம்பாலம் வழியாக செல்லும் பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என. கிணத்துக்கடவு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X