| திரிசூலம் கல்குவாரி தண்ணீர் எடுக்கும் திட்டம்: நாள் ஒன்றுக்கு 4 லட்சம் லிட்டர் இலக்கு Dinamalar
திரிசூலம் கல்குவாரி தண்ணீர் எடுக்கும் திட்டம்: நாள் ஒன்றுக்கு 4 லட்சம் லிட்டர் இலக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:20

பல்லாவரம்:
பல்லாவரம் நகராட்சியில் நிலவி வரும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க, திரிசூலம் கல்குவாரியில் இருந்து, நாள் ஒன்றுக்கு, 4 லட்சம் லிட்டர், தண்ணீர் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.பல்லாவரம் நகராட்சியில், 42 வார்டுகள் உள்ளன. சென்னை குடிநீர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வாரியங்களில் இருந்து கிடைக்கும் தண்ணீரை தேக்கி, பொதுமக்களுக்கு, ஏழு நாட்களுக்கு ஒருமுறை, நகராட்சி வினியோகித்து வந்தது.அந்த வகையில், ஒரு நாள் தேவை, 290 லட்சம் லிட்டர் ஆகும்.கோடை காலத்தில், வாரியங்களில் இருந்து கிடைக்கும் தண்ணீரின் அளவு, வெகுவாக குறைந்து விடுவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் பெரும் சிரமப்படுகின்றனர்.கடந்தாண்டை காட்டிலும், இந்தாண்டு, கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.குளிக்க, துணி துவைக்க போன்ற, பிற தேவைகளுக்கு கூட, பணம் கொடுத்து, லாரி தண்ணீர் வாங்கும் சூழல் நீடிக்கிறது.இதை கருத்தில் வைத்து, நகராட்சி நிர்வாகம், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.முதற்கட்டமாக, மூவரசம்பட்டு கல்குவாரியில் இருந்து, நாள் ஒன்றுக்கு, ஐந்து லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்து, சுத்திகரிப்பு செய்து, லாரிகள் மூலம் வினியோகித்து வருகிறது.இதைத்தொடர்ந்து, திரிசூலத்தில் உள்ள மலை எண் - 1, கல்குவாரி தண்ணீரை சுத்திகரிப்பு செய்து, வினியோகிக்க திட்டமிட்டுள்ளது.ஆரம்பத்தில், இதற்கு, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பேச்சுக்கு பின், கலைந்து சென்றனர்.இதையடுத்து, பரங்கிமலை ஊராட்சி ஒன்றயத்திடம் இருந்து, அனுமதி பெற்று, தண்ணீரை எடுப்பதற்கான பணிகளை, நகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது.இந்த குவாரி, 100 முதல் 300 அடி ஆழம் கொண்டது.குவாரியில் இருந்து தண்ணீரை எடுத்து, இரண்டு தொட்டிகளில், சுத்திகரிப்பு செய்து, அதன்பின் லாரியில் நிரப்பி, வார்டுகள் தோறும், மக்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது. ஓரிரு நாட்களில், தண்ணீர் எடுக்கும் திட்டம் துவங்கும். இதுபோன்ற கல்வாரி தண்ணீரால், மக்கள் நகராட்சியில் நிலவும், பிரச்னை ஓரளவிற்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X