| 33 கோடி ரூபாய் வீண்! மேம்பாலம் கட்டியும் பயனில்லை; தொடரும் நெரிசலில் மக்கள் தவிப்பு Dinamalar
33 கோடி ரூபாய் வீண்! மேம்பாலம் கட்டியும் பயனில்லை; தொடரும் நெரிசலில் மக்கள் தவிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:32

மேட்டுப்பாளையம் : வாகன நெரிசலுக்கு தீர்வு காணவும், உயிர் பலியை குறைக்கவும் கட்டப்பட்ட காரமடை மேம்பாலத்தால், எந்த பயனுமில்லை. அன்றாடம் நெரிசலில் சிக்கி விபத்துக்களும் உயிர்பலிகளும் தொடர்கின்றன.



மேட்டுப்பாளையம் - கோவை பிரதான சாலையில், 33.77 கோடி ரூபாயில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த, 2015 ம் ஆண்டு துவங்கியது. ஒன்றரை ஆண்டில் கட்டி முடிக்க வேண்டிய பணியை, நான்கு ஆண்டாகியும் முழுமையாக நிறைவு செய்யவில்லை. மேம்பாலம், 12 மீட்டர் அகலத்தில், 524 மீட்டர் நீளத்தில், 16 துாண்களோடு, பாலத்தின் இரு பகுதிகளிலும் தடுப்புச்சுவர் கட்டி முடிக்கப்பட்டது.பாலத்தை மட்டும் கட்டி முடித்த, நெடுஞ்சாலைத்துறை, சர்வீஸ் சாலை அமைக்காமல், மக்களுக்கு கடும் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தி பாலப்பணியை நிறைவு செய்துவிட்டதாக அறிவித்து, திறப்பு விழாவையும் நடத்தி, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட்டது.



திறக்கப்பட்ட ஆறுமாதங்களாகியும், பாலத்தின் கிழக்கு மேற்கில், சர்வீஸ் சாலை, சாக்கடை, மக்கள் நடைபாதை, மழைநீர் வடிகால் ஆகியவை அமைக்கப்படவில்லை. ஆனாலும் பாலத்தில் கடும் நெரிசலுக்கிடையே வாகனங்கள் கடந்து செல்கின்றன.சர்வீஸ் சாலை, மழைநீர் வடிகால் ஆகியவை இல்லாததால், பாலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் வசிக்கும் மக்கள் வர்த்தகம் நடத்தும் வர்த்தகர்கள் நடமாடுவதற்கே கடும் சிரமப்படுகின்றனர். பாலத்தின் இருபக்கங்களிலும், நான்கு மீட்டருக்கு சர்வீஸ் ரோடும், ஒரு மீட்டரில் சாக்கடையும், மின் கம்பமும் அமைக்க இடம் தேவைப்படுகிறது.



அதற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்த வருவாய்த்துறை முடிவு செய்து, பாலத்தின் இருபக்கமும் உள்ள நில உரிமையாளர்களிடம் நிலத்தை கேட்டது. பலர் நிலம் கொடுக்க ஒப்புக் கொண்டனர். சிலர், அரசின் வழிகாட்டு மதிப்பு தொகைக்கு நிலத்தை கொடுக்க ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் பாலத்தின் இருபக்கமும் சர்வீஸ் சாலை அமைக்க முடியாத சூழல் உள்ளது.



கோவை- மேட்டுப்பாளையம் சாலையில், ஆர்.வி., கல்லுாரி அருகே துவங்கும் மேம்பாலம், காரமடையிலுள்ள ஐந்து சாலை சந்திப்பில் நிறைவடைகிறது.ஐந்து சாலை சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் எதிரும் புதிருமாக முட்டி மோதி நெரிசலை ஏற்படுத்துகிறது. ஐந்து சாலை சந்திப்பில் துவங்கும் வாகன நெரிசல், மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு கி.மீ. துாரத்துக்கு அணிவகுக்கின்றன. இவை சரியாகி இயல்பு நிலைக்கு வர இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகிறது.



33.77 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தால் யாருக்கும் எந்த பலனுமில்லை. அன்றாடம் ஐந்து சாலை சந்திப்பில் சிக்கி பல மணி நேரம் வாகனங்கள் காத்துக்கிடக்கின்றன. போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஐந்து சாலை சந்திப்பில், ரவுண்டான அமைத்து அங்கு நிரந்தரமாக போக்குவரத்து போலீசார் அமைத்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் அப்போது தான் அங்கு நெரிசலுக்கு தீர்வு காண முடியும்.



நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது: காரமடை ரயில்வே மேம்பாலத்தின் இருபக்கமும் சர்வீஸ் ரோடு போட, 90 நபர்களது இடங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் அரசின் வழிகாட்டு மதிப்புக்கு, 68 பேர் ஏற்றுக்கொண்டனர். இதுவரை, 48 பேருக்கு அதற்கான தொகை வழங்கப்பட்டது.மேலும், 22 நபர்கள் அரசின் வழிகாட்டு மதிப்பு தொகையை ஏற்றுக்கொள்ளவில்லை. மேம்பாலப் பணிகள் குறிப்பிட்ட காலத்தில் முடிக்காமல் இருக்க இதுவும் ஒரு காரணம். நில உரிமையாளர்களுடன் பேச்சு நடக்கிறது. சுமுக முடிவு எட்டப்படும். ஒட்டுமொத்த பணிகளும் வரும் ஆகஸ்ட்டிற்குள் முடிக்கப்படும். இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X