| ஒரு குவார்ட்டர் ரூ.300; ஜோரா நடந்தது 'சேல்ஸ்' Dinamalar
ஒரு குவார்ட்டர் ரூ.300; ஜோரா நடந்தது 'சேல்ஸ்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:50

தொண்டாமுத்துார் : தொண்டாமுத்துார் பகுதிகளில் உள்ள, 'டாஸ்மாக்' மதுக்கடை அருகில் இருந்த, 'பார்'களில், கடந்த மூன்று நாட்களாக, கூடுதல் விலைக்கு மதுவிற்பனை படுஜோராக நடந்தது.



சூலுார் சட்டசபை தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதால், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து 'டாஸ்மாக்' மதுக்கடைகளுக்கும், கடந்த, 17, 18, 19ம் தேதிகள், விடுமுறை அளிக்கப்பட்டது.வழக்கமாக, மதுக்கடை செயல்படும் நாட்களில் கூட, 24 மணி நேரமும் மதுக்கூடத்தில் மது விற்பனை நடக்கும். தொண்டாமுத்துார் பகுதிகளில், கலிக்கநாயக்கன்பாளையம், குளத்துப்பாளையம், தொண்டாமுத்துார் நரசீபுரம் ரோடு, புத்துார், வெள்ளெருக்கம்பாளையம், அஜ்ஜனுார் சிறுவாணி ரோடு உள்ளிட்ட இடங்களில் பாருடன் கூடிய மதுக்கடைகள் செயல்படுகின்றன.



விடுமுறை நாட்களிலும், தங்கு தடையின்றி, எவ்வித பயமுமின்றி, 'டாஸ்மாக்' பார்களிலேயே, 24 மணி நேரமும் மது விற்பனை நடந்தது. முதல் நாளில், 105 ரூபாய் விலையுள்ள குவார்ட்டர், 180 ரூபாய்க்கும், இரண்டாம் நாளில், 200-250 ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டது. நேற்று, ஞாயிற்றுக்கிழமை என்பதால், பார்களில், 'குடி'மகன் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று, ஒரு குவார்ட்டர், 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 130 ரூபாய் மதிப்புள்ள, ஒரு பீர், 230 ரூபாய்க்கு விற்கப்பட்டது.



இக்கடைகள், மெயின் ரோட்டிலேயே அமைந்துள்ளன. எவ்வித அச்சமின்றி, பார்களை திறந்து வைத்து விற்றுக்கொண்டிருந்தனர். 'டாஸ்மாக்' அதிகாரிகளோ, போலீசாரோ அல்லது தேர்தல் பறக்கும் படையினரோ இவர்களை கண்டுகொள்ளவில்லை.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X