தொடூர்:கூத்தவாக்கம் கிராம எல்லையில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து, தொடூருக்கு குடிநீர் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
வாலாஜாபாத் அடுத்த, தொடூர் ஊராட்சியில், 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியினர் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு தண்ணீர், குடிக்க லாயக்கற்ற நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.இந்த தண்ணீரில் சாதம் வடித்தால் குழைவதாகவும், தண்ணீரில் உப்பு படிமங்கள் அதிகமாக இருப்பதாகவும், கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.தொடூர் கிராம மக்கள் சிலர் கூறியதாவது:தொடூர் - கூத்திரம்பாக்கம் சாலையில் இருந்து வரும் தண்ணீர், குடிப்பதற்கு கொஞ்சம் பரவாயில்லை.கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் வரும் தண்ணீர், குடிப்பதற்கு தகுந்ததாக இல்லை.ஆகையால், கூத்தவாக்கம் எல்லையில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து, எங்கள் கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.