ஊத்துக்காடு:வாலாஜாபாத் - ஒரகடம் சாலை விரிவாக்க பணி இடத்தில், அடிக்கடி விபத்து நடப்பதாக புகார் எழுந்துள்ளது.வாலாஜாபாத் - ஒரகடம் சாலை நான்கு வழி சாலை, ஆறு வழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடக்கிறது. முதலில், சிறு தரைப்பாலங்களை விரிவுபடுத்தி, தார் செப்பனிடும் பணி நடக்கிறது.இதற்காக, ஒரகடம் - வாலாஜாபாத் இரு மார்க்கங்களிலும், வாகனங்கள் செல்ல, சாலை நடுவே ஒருவழி பாதை விடப்பட்டுள்ளது.இந்த பாதையில் செல்லும் கார், பஸ், லாரிகளுக்கு, இரு சக்கர வாகன ஓட்டிகள் வழிவிடும் போது, சாலையோரம் கொட்டப்பட்டுள்ள ஜல்லிக்கற்களால், அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இதில், அவ்வப்போது உயிரிழப்பும் ஏற்படுகிறது.விரிவாக்க பணி நடக்கும் சாலையில், 6ம் தேதி ஊத்துக்காடு கோவிலுக்கு சென்ற வாலிபர், இரு சக்கர வாகனத்தில் இருந்து, ஜல்லிக்கற்களால் நிலை தடுமாறி விழுந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார்.எனவே, வாலாஜாபாத் - ஒரகடம் ஆறு வழி சாலை பணியில், விபத்து நடக்காதபடி, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.