ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வைகை அணையில் இருந்து புதிய திட்டத்தின் கீழ் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சப்ளை செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள் உள்ளன. பெரும்பாலானவை நிலத்தடிநீர் ஆதாரத்தை மட்டுமே குடிநீராகவும், இதர தேவைக்கும் பயன்படுத்துகின்றன. கடந்த பல ஆண்டுக்கு முன் இப்பகுதியில் நிலத்தடிநீர் ஆதாரம் அதிகம் இருந்தது.
இதனால் மூன்று போகம் விளைந்ததுடன், குடிநீருக்கும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. கடந்த சில ஆண்டுகளில் போதுமான மழை இல்லாததால் குளங்கள், கண்மாய்களுக்கு நீர் வரத்து ஏற்படவில்லை. இதனால் நிலத்தடி நீர் ஆதாரமும் பாதிப்படைந்துள்ளது. தற்போது குடிநீருக்கே அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஒன்றியத்தில் உள்ள நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குன்னுார் ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.தட்டுப்பாடுஆற்றில் நீர் வரத்து இருந்தால் மட்டுமே உறை கிணறுகளுக்கு நீர் கிடைக்கும். உறை கிணறு வற்றியதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக வைகை அணையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை குழாய் மூலம் கொண்டு செல்ல வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.இப்பகுதியின் புதிய குடிநீர் திட்டத்திற்கு ஏற்கனவே பல மாதத்திற்கு முன் 'சர்வே' மேற்கொள்ளப்பட்டுள்ளது. திட்டத்திற்கு நிதி ஒதுக்கி செயல்படுத்துவதற்கான நடவடிக்கை இல்லை.எனவே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அனைத்து கிராமங்களுக்கும் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும்.----------