| செங்குளத்தின் தென்கரையில்... ரோடு போட முயற்சி! கோர்ட் உத்தரவு அப்பட்டமாக மீறல் Dinamalar
செங்குளத்தின் தென்கரையில்... ரோடு போட முயற்சி! கோர்ட் உத்தரவு அப்பட்டமாக மீறல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:12

கோவை: 'நீர்நிலைகளில் எவ்வித கட்டுமானமும் இருக்கக்கூடாது' என்கிற சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி, எவ்வித அனுமதியும் பெறாமல், குனியமுத்துார் செங்குளத்தின் தென்கரையில் ரோடு போடுவதற்கான முயற்சிகளில், மாநகராட்சி இறங்கியுள்ளது.



நீர் நிலைகளில் எவ்வித கட்டுமானமும் இருக்கக்கூடாது; ஆக்கிரமிப்பு இருந்தால், உடனடியாக அகற்ற வேண்டுமென, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகள் அடிக்கடி அறிவுறுத்தி வருகின்றனர். நீர் நிலைகளை ஆக்கிரமித்து வசிப்போருக்கு, குடிசை மாற்று வாரியம் மூலமாக, மாற்று வீடு கட்டித்தரப்படுகிறது. என்றாலும், அரசு துறைகளே, நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டுமானங்கள் உருவாக்குவது தொடர்கதையாக நடக்கிறது.



உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்திலும், அம்மன் குளத்திலும் குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியபோது, மண்ணுக்குள் புதைந்தன. இரு தளங்களை இடிக்க வேண்டி கட்டாயம் ஏற்பட்டது; அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதற்கு காரணமானவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் காரணமாகவோ, என்னவோ, துணிச்சலாக, அதே மாதிரியான தவறை மீண்டும் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.



குனியமுத்துார் அருகே, செங்குளத்தை ஒட்டிய, குளத்துப்பாளையத்தில், 6 ஏக்கர் பரப்பளவில், ரூ.57.60 கோடியில், 720 அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் வேலையை, குடிசை மாற்று வாரியம் மேற்கொண்டுள்ளது. சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், கட்டுமான பணி தொடர்ந்து நடக்கிறது. பல அடுக்குமாடி கட்டும்போது, கட்டடம் தாங்குமா, இதுவும் மண்ணுக்குள் புதையுமா என்பது போக போகத்தெரியும்.



இக்குடியிருப்புக்கு வந்து செல்ல போக்குவரத்து வசதி தேவை என்பதற்காக, செங்குளத்தின் தென்கரையில் ரோடு போடும் முயற்சியில், மாநகராட்சி நிர்வாகம் அனுமதி கோரியுள்ளது. நகரமைப்பு பிரிவினர், பொதுப்பணித்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இன்னும் அனுமதி கொடுக்காத நிலையில், செம்மண் கொட்டி, ரோடு போடுவதற்கான ஆயத்தப்பணி நடந்து வருகிறது.



பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'செங்குளத்தின் தென்கரையில் ரோடு போடுவதற்கு மாநகராட்சி அனுமதி கோரியது; நிராகரித்து விட்டோம். நீர் நிலைகளில் எவ்வித கட்டுமானமும் உருவாக்க, அனுமதி கொடுக்கவில்லை. கட்டுமானமும் மேற்கொள்ளவில்லை. போக்குவரத்து வசதிக்காக, குடியிருப்பு கட்டுவதற்கு குழி தோண்டிய மண்ணை கொட்டி வைத்துள்ளனர். தற்போது குளத்தில் தண்ணீர் இல்லை. தண்ணீர் வரும்பட்சத்தில், மண் குவியலை உடனடியாக அகற்றிக் கொள்வர்' என்றனர்.



'வசதியாக இருக்கும்'



நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, ''போக்குவரத்து வசதிக்காக, உக்கடம் பெரிய குளக்கரையில் ரோடு போட்டதன் அடிப்படையில், செங்குளத்தின் தென்கரையில் ரோடு போட, பொதுப்பணித்துறையிடம் அனுமதி கோரியுள்ளோம்; இன்னும் அனுமதி தரவில்லை. அப்பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு உருவாகிறது. அங்கு வசிப்போருக்கு இப்பாதை வசதியாக இருக்கும். இப்பகுதியில் உள்ள திட்டச்சாலையுடன் இணைக்க முடிவு செய்திருக்கிறோம்,'' என்றார்.



'துணிந்தே தவறு'



தன்னார்வலர்கள் கூறுகையில், 'வாலாங்குளத்தின் குறுக்கே பாலம் கட்டி, இரண்டாக துண்டித்தது போல், செங்குளத்திலும் உருவாக்க முயற்சிக்கின்றனர். குழாய்கள் பதித்து செம்மண் கொட்டி, வாகன போக்குவரத்துக்கு ஏதுவாக பாதை ஏற்படுத்தப்படுகிறது. அரசு துறை நிர்வாகங்களே துணிந்து, தவறிழைக்கின்றன. இது, நீர் நிலைகளை பாழ்படுத்தும் செயல்' என்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X