கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வெயிலுடன் அனல் காற்று வீசியதால், பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மலையையொட்டியுள்ள கள்ளக்குறிச்சி பகுதியில், கடந்த ஒரு வாரமாக வெயில் மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது.வெயிலின் தாக்கத்திற்கு பயந்து பொது மக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். வெளியில் வரும் பலர், பாதுகாப்பிற்காக கையில் குடையுடனும், சிலர் முகத்தில் துணியை போர்த்திக்கொண்டும் செல்கின்றனர்.கடந்த இரு தினங்களாக கள்ளக்குறிச்சியில், வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால், பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நேற்று வீசிய அனல் காற்று காரணமாக பொது மக்கள் வெளியில் தலைகாட்டவில்லை. முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.