விழுப்புரம்: வளவனுார் பகுதியில் தொடர் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வரும் மர்ம ஆசாமிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வளவனுார் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் பலர் வெளியூர் செல்வதற்காக தங்களது பகுதியிலிருந்து சைக்கிளில் வளவனுாருக்கு வருகின்றனர்.அவர்கள் வளவனுார் சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் சைக்கிளை நிறுத்தி விட்டு, மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.இந்த சைக்கிள்களை மர்ம ஆசாமிகள் நோட்டமிட்டு, திருடி செல்கின்றனர். கடந்த சில மாதங்களாக வளவனுார் சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் பலரது சைக்கிள்கள் திருடுபோய் உள்ளது.சைக்கிளை பறிகொடுத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும், அதனை போலீசார் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இதனால், பெரும்பாலானோர் புகார் அளிப்பதில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் தொடர் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால், சைக்கிளை பறிகொடுத்தோர் புலம்பி வருகின்றனர்.எனவே, வளவனுார் சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் தொடர் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வரும் மர்ம ஆசாமிகளை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.