வில்லியனுார்: துத்திப்பட்டு ஏரியில் நடைபெற்ற மண் கொள்ளை குறித்து பொதுப்பணித்துறையினர், போலீசில் புகார் .அளித்துள்ளனர்.சேதராப்பட்டு அடுத்த துத்திப்பட்டு கிராம எல்லையில் அரசுக்கு சொந்தமான ஏரி உள்ளது. இதன் அருகே கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் புதுச்சேரி கிளப் சார்பில் 'சீக்கிம்' நிறுவனம் மைதனாம் அமைத்துள்ளனர். மேலும், இரு கிரிக்கெட் பயிற்சி மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இதற்காக அருகில் உள்ள துத்திப்பட்டு ஏரியில் அரசு அனுமதி பெறாமல், கடந்த இரு வாரங்களாக இரவு பகலாக ஜே.சி.பி.,க்கள் மூலம் 10க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை கொண்டு நுாற்றுக் கணக்கான லோடு மண் அடித்து வந்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் சிலர், மண் திருட்டை தடுத்து நிறுத்தி பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் ஏரியை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்ட அதிகாரிகள், ஏரியில் மண் கொள்ளை அடித்தது குறித்து சேதராப்பட்டு போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.விவசாயிகள் தங்கள், நிலத்தை சமன் படுத்த ஓரிரு லோடு மண் எடுக்க கலெக்டர், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற மாதக்கணக்கில் நடையாக நடக்க வேண்டியுள்ளது. ஆனால் தனியார் கிரிக்கெட் கிளப் சீக்கிம் நிறுவனத்தினர் அரசு அனுமதி பெறாமலே ஏரியில் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி நுாற்றுக்கணக்கான லோடு மண்ணை கொள்ளையடித்த போதிலும், அதிகாரிகள் பெயருக்கு போலீசில் புகார் அளித்திருப்பது, கிராம மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.