| டிஜிட்டல் மயத்தில் அசத்துகிறது புதுச்சேரி மார்க்கெட் கமிட்டி Dinamalar
டிஜிட்டல் மயத்தில் அசத்துகிறது புதுச்சேரி மார்க்கெட் கமிட்டி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
02:34

புதுச்சேரி: புதுச்சேரி மார்கெட் கமிட்டியில் எடை போடுவது முதல் விலை பட்டியல் வரையில் முழுவதுமாக டிஜிட்டல் மையம் மற்றும் 'ஆன் லைன்' மூலம் நடைபெறும் வர்த்தகம் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.விளை பொருட்களுக்கு எங்கு விலை கிடைக்கிறதோ அங்கு விற்பனை செய்யக்கூடிய வகையில், விவசாயிகளுக்கு உதவும் வகையில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் இத்திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், புதுச்சேரி தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டியிலும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, 'ஆன்லைன்' மூலமாக ஏல பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முயற்சிகள் படிப்படியாக நடந்து வருகிறது. அதற்காக இந்த மார்க்கெட் கமிட்டியில் பதிவு செய்துள்ள 8,500 விவசாயிகளின் விபரங்கள் ஆன் லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.இத்திட்டத்தில்,மார்க்கெட் கமிட்டியில்இருந்த முக்கோண எடை அகற்றப்பட்டு நான்கு டிஜிட்டல் எடை மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு டிஜிட்டல் எடைமேடை வரவழைக்கப்பட உள்ளது.தானியங்களின் அன்றாட விலை பட்டியல் டிஜிட்டிலில் டிஸ்பிளே செய்யப்பட்டு வருகிறது. மேலும், தானியங்கள் எடை போட்டதும், நேரடியாக டிஸ்பிளே ஆவதுடன், இ-நாம் என்ற மொபைல் ஆப் மூலம், விவசாயியின் மொபைல் போனில் தெரிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.இப்படி பல வகையிலும், புதுச்சேரி மார்க்கெட் கமிட்டி டிஜிட்டல் மயமாகியது விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தை முழுமையாக விவசாயிகள் மத்தியில் கொண்டு செல்வதற்கான முயற்சியில் மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் இறங்கியுள்ளது.திட்டத்தின் செயல்பாடு குறித்து மார்க்கெட் கமிட்டி அதிகாரி கூறுகையில், திட்டத்தில் அறிமுகம் படுத்தப்பட்டுள்ள, 'இ-நாம்' மொபைல் போன் செயலியை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் 'கூகுள்' பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 'இ-நாம்' செயலியில் விவசாயிகள், வியாபாரிகள் சரக்கு, விலை மற்றும் பதிவு உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளது.விவசாயிகள், வியாபாரிகள் தங்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், செயலி மூலமே மின்னணு வேளாண் சந்தை திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பொருட்களின் இருப்பு மற்றும் விலை நிலவரம் உட்பட அனைத்து தகவல்களையும் எளிதில் தெரிந்துக்கொள்ளலாம்.மேலும், விவசாயிகள் நேரடியாக தங்களது விளைபொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம். இத்திட்டம் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் சிரமத்தை குறைக்கும் என்பதால் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்றார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X