| பசுமையாக்குவோம்... உறுதி எடுப்போம் Dinamalar
பசுமையாக்குவோம்... உறுதி எடுப்போம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
06:25

பசுமையான விருதுநகர் என்பது ஆண்டாண்டு காலமாக விருதுநகர் மக்களின் கனவாகவே உள்ளது. விருதுநகர் கடும் வறட்சியான மாவட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. அதற்கு காரணம் மரங்கள் எண்ணிக்கை குறைவு. புழுதி பறக்கும் விருதுநகரை புதிய விருதுநகராக மாற்ற வேண்டுமானால் வீடுகள்தோறும், வீதிகள்தோறும் மரங்கள் நட வேண்டும். ஆனால் விருதுநகரில் மரங்கள் வெட்டப்படுவது தான் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது.விருதுநகரில் மரங்கள் இல்லாததால் மழைபொழிவு இன்றி வறண்ட பூமியாக காட்சியளிக்கிறது.கொடூர வெயிலிடம் இருந்த தப்பிக்க, நம்மால் முடிந்த அளவு மரங்களை நட்டு பராமரித்து வளர்க்க வேண்டும். மரக்கன்றுகளை நட்டு, அவை பெரிய மரமாக வளரும் வரை பராமரிப்பேன் என அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும். இன்றைக்கு சிலர் மரக்கன்றுகள் நடுகிறேன் என வெறுமனே கன்றுகளை நட்டு செல்கின்றனர்.இரண்டு நாட்கள் கழித்து பராமரிப்பின்றி அந்த மரக்கன்றுகளை ஆடு, மாடுகள் மேய்கின்றன. மரக்கன்றுகளை நடுவதை விட நட்ட மரக்கன்றுகளை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.இதை வேறு கோணத்தில் விருதுநகரை சேர்ந்த 'சிறுதுளிகள்' என்ற தொண்டு நிறுவனம் செய்து வருகிறது.இந்த அமைப்பினர் விருதுநகர் ரோசல்பட்டி அருகே உள்ள குமாரபுரத்தில் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர். அந்த கிராம மக்களின் வீட்டிற்கு சென்று அவரவர் விருப்பமான மரங்களை கேட்டறிந்தனர். பின் அதை இவர்களே வாங்கி இலவசமாக நட்டு கொடுக்கின்றனர். மேலும் மக்களிடம் மரங்களின் நன்மைகள் குறித்தும், எதிர்கால சந்ததியினர் படும் சிரமங்கள் குறித்தும் எடுத்துக் கூறி நடுகின்றனர்.இந்த அமைப்பின் செயலால் தற்போது அந்த கிராமத்தில் மரக்கன்றுகள் அதிகரித்துள்ளன.விருதுநகர் போன்ற வறட்சி மாவட்டங்களில் மரக்கன்றுகள் அதிகம் நட்டால் மழை கிடைக்கும். மழை பெய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். நிலத்தடி நீர்மட்டம் மேம்பட்டால் விவசாயமும், நாடும் செழிக்கும்.இந்த சிறுதுளிகள் தொண்டு அமைப்பினர் செய்த காரியத்தால் பொதுமக்கள் மத்தியில் மரங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அவரவர் விருப்பத்திற்கேற்ற மரங்கள், அதுவும் அவர்களது வீட்டின் முன் நடப்படுகிறது. இதனால் கிராம மக்கள் ஒவ்வொருவரும் தானாக முன் வந்து மரக்கன்றுகளை பராமரிக்கின்றனர்.சுவாசிக்க மரங்கள் அவசியம்இன்று நடப்படும் மரங்கள் நம் எதிர்கால சந்ததியினரின் சுவாசக்காற்றுக்கு ஒரு அடிக்கல். ஆகவே பொதுமக்கள் அதிகளவில் மரங்களை நட வேண்டும். எங்கள் அமைப்பு மூலம் பள்ளிகளிலும் மரக்கன்றுகள் நட்டு வருகிறோம். மரங்கள் மனித இனத்திற்கு பல்வேறு உதவிகள் புரிகிறது. ஆனால் நாம் தான் அவற்றின் மகிமை தெரியாமல் பிடுங்கி எறிகின்றோம். அனைவரும் வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்.பசுமையானஎதிர்காலத்தை உருவாக்கஉறுதி எடுப்போம்.ரவி, செயலாளர், சிறுதுளிகள் தொண்டு நிறுவனம், விருதுநகர்மூலிகை செடிகளை நடுங்கள்நான் ரயில்வே ஸ்டேஷன் வாயிலில் மரங்களை நட்டு பராமரிக்கிறேன். இயற்கை ஆர்வத்தால் சிறுதுளிகள் அமைப்பில் சேர்ந்து கிராமங்களுக்கு சென்று மரங்களை நட்டு வருகிறேன். மரங்கள் நற்குணம் நிறைந்தவை. நாம் மரங்களை ஆணி அறைந்து காயப்படுத்திய போதும் அவை நமக்கு நன்மையே செய்கின்றன. வீடுகளில் அரிதான மூலிகை செடிகளை நடலாம். இதனால் குழந்தைகள், முதியவர்களுக்கு ஏற்படும் சிறுநோய்களை முளையிலே கிள்ளி எறியலாம்.நாகராஜன், சிறுதுளிகள் உறுப்பினர், விருதுநகர்

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X