ஈரோடு: கோடை காலத்திலும், தெப்பகுளம் நீர்மட்டம் உயர்வதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு, வீரப்பன்சத்திரம் பகுதியில், ஊர் நடுவே தொன்மையான தெப்பகுளம் உள்ளது. இந்த குளத்துக்கு, மழை நீரும், கனிராவுத்தர் குளத்தின் நிலத்தடி நீரும் ஆதாரமாக உள்ளது. நாயக்கர் காலகத்தில் கட்டபட்ட இக்குளத்தில், ஆண்டு முழுவதும் இயற்கையாகவே தண்ணீர் ஊற்றெடுக்கும். அதிகபட்ச மழை பெய்த காலத்தில், தெப்பகுளம் நிரம்பி, தண்ணீர் வெளியேறி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், குளத்தை சுற்றியும், உள்ளேயும், சிலர் குப்பை கொட்டி அசுத்தம் செய்தனர். சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்ததால், எம்.எல்.ஏ., தென்னரசு, தொகுதி மேம்பாட்டு நிதி, ஒன்பது லட்சம் ரூபாய் செலவில், 2017ல் கம்பி வேலி அமைக்கப்பட்டது. குளத்தை பாதுகாப்பு செய்ததற்கான பலன், தற்போது கிடைத்துள்ளது. கோடை காலம் என்பதால், வெயில் வாட்டி வதைக்கிறது. பல நீர் நிலைகள் வற்றி, நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளம் சென்று விட்டது. ஆனால், வீரப்பன்சத்திரம் தெப்பகுள நீர்மட்டம், ஒரு மாதத்தில், ஐந்தடி அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த ஒரு வாரத்தில், ஈரோட்டில் நான்கு நாட்களுக்கு, தொடர்மழை பெய்தது. இதனால் ஐந்து அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான போர்வெல், கிணறுகளில் போதிய தண்ணீர் உள்ளது. கோடையை சமாளித்து விடலாம் என்ற தைரியம், மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.