தர்மபுரி: சாமந்திப்பூவுக்கு, அதிக விலை கிடைத்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி, நல்லம்பள்ளி, தொப்பூர், மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், 2,600 ஏக்கருக்கு மேல், சாமந்தி பூ சாகுபடி செய்துள்ளனர். மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் மாவு பூச்சி உள்ளிட்ட பூச்சிகள் தாக்குததால், சாமந்தி செடிகள் பாதித்துள்ளன. போதிய விளைச்சல் மற்றும் விலையுமின்றி விவசாயிகள் கவலை அடைந்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன், 180 ரூபாய் என விற்ற, ஒரு கிலோ சாமந்தி பூ தற்போது, கிலோ, 250 முதல், 300 ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுகிறது. விளைச்சல் பாதித்த நிலையில், தற்போது சாமந்தி பூவுக்கு நல்ல விலை கிடைத்து வருவதால், வருவாய் இழப்பிலிருந்து தப்பித்துள்ளதாக, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அக்னி நட்சத்திரம் முடிந்த பின் நடக்கும், திருமண சீசனில், சாமந்தி பூவின் விலை, மேலும் அதிகரிக்கும் என, விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.