ஓசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் நீர்பிடிப்பு பகுதியில், மழை பெய்வதால், நேற்று அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதனால் தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 400 கன அடி நீர் திறக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணை நீர்பிடிப்பு பகுதியில், விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்து ஏற்ற இறக்கமாக உள்ளது. இந்த மாதத்தில் அதிகப்பட்சமாக கடந்த, 16ல் வினாடிக்கு, 568 கன அடி நீர்வரத்து இருந்தது. அதன் பின் நீர்வரத்து படிப்படியாக சரிந்து, நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 320 கன அடியாக குறைந்தது. அணையில், போதிய நீர் இருப்பு உள்ளதால், 320 கன அடி தண்ணீரும், தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், நேற்று காலை, அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 400 கன அடியாக அதிகரித்தது. அணை மொத்த கொள்ளளவான, 44.28 அடியில், 41.98 அடிக்கு தண்ணீர் இருப்பு இருந்ததால், தென்பெண்ணை ஆற்றில், 400 கன அடி நீரும் திறந்து விடப்பட்டது. தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் செல்வதால், கோதண்டராமர் சிலை கடந்த, 9 முதல், பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தினமும் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.