| வாழப்பாடி அருகே தோட்டத்தில் துப்பாக்கி தொழிற்சாலை: வன அதிகாரிகள் அதிர்ச்சி; தப்பிய 3 பேர் மீது புகார் Dinamalar
வாழப்பாடி அருகே தோட்டத்தில் துப்பாக்கி தொழிற்சாலை: வன அதிகாரிகள் அதிர்ச்சி; தப்பிய 3 பேர் மீது புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
10:45

வாழப்பாடி: வாழப்பாடி அருகே, தோட்டத்தில் பட்டறை அமைத்து, கள்ளத்துப்பாக்கி தொழிற்சாலை செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தப்பிய பெண் உள்பட மூவரை, வாழப்பாடி போலீசார் தேடி வருகின்றனர்.


சேலம் மாவட்டம், வாழப்பாடி வனவர் குமரசேன், வனக்காப்பாளர்கள் மாணிக்கம், ஜெயராமன், ஜெயக்குமார், சேகர், காமராஜ் ஆகியோர், குறிச்சி பிரிவில், நேற்று மதியம் ரோந்தில் ஈடுபட்டனர். பெரியகுட்டிமடுவு அருகே, காளியம்மன் கோவில் பகுதியில், அதே பகுதியை சேர்ந்த வரதன் மகன் ராமர், 45, மரக்கிளைகளை எடுத்துச் சென்றார். அவரை பின் தொடர்ந்தபோது, தோட்டப்பகுதியில் இருந்த ஒரு குடிசைக்குள் நுழைந்தார். சிறிது நேரத்தில், ஒரு பெண்ணுடன் வந்த அவர், திடீரென ஓட்டம் பிடித்தார். குடிசையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கு பட்டறை அமைத்து, கள்ளத்தனமாக நாட்டுத் துப்பாக்கி தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குடிசையில் இருந்து, 20க்கும் மேற்பட்ட துப்பாக்கி கட்டை, துப்பாக்கி தயாரிப்புக்கான உபகரணங்களை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய ராமர், துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டதும், அவருக்கு உதவியாக பெண் இருந்திருக்கலாம் என்றும், சந்தேகம் எழுந்துள்ளது. குடிசை அமைந்திருந்த பகுதி, கரியன் மகன் ராமர், 43, என்பவருக்கு சொந்தமானதாகும். இதுகுறித்து வாழப்பாடி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர். வனப்பகுதி தோட்டத்தில், கள்ளத்துப்பாக்கி தயாரிப்பு நடந்து வந்தது, சேலம் மாவட்ட போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இங்கிருந்து எந்தெந்த பகுதிகளுக்கு துப்பாக்கி, யார் யாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. போலீசார் புலன் விசாரணை நடத்தினால், பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாக வாய்ப்புள்ளது.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X