கோத்தகிரி:கோத்தகிரி ஆர்.கே.சி., லைன் பகுதிக்கு கழிவுநீரை திறந்து விடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக, மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.கோத்தகிரி பேரூராட்சி, 15வது வார்டுக்கு உட்பட்ட, ஆர்.கே.சி., லைன், தர்மோனா மற்றும் முருகன் காலனி பகுதியில், பல குடும்பங்கள் வசிக்கின்றன.
இப்பகுதி, கோத்தகிரி பஸ் ஸ்டாண்டில் இருந்து, தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. செங்குத்தான பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளில் இருந்து, வெளியேறும் 'செப்டிக் டாங்க்' கழிவு நீர், அடிக்கடி திறந்து விடுவதாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து, புகார் எழுப்பி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.தற்போது, கோத்தகிரி பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், செப்டிக் டாங்க் கழிவுகள், அதிகளவில் திறந்து விடுவதாக புகார் எழுந்துள்ளது. இவ்வாறு, திறக்கப்படும் கழிவுகளால், தாழ்வான பகுதியில் வசிக்கும் ஆர்.கே.சி., லைன் உட்பட, தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தவிர, இந்த கழிவு நீர், அக்கால் ஆற்றில் நேரடியாக கலப்பதால், அப்பகுதியில் உள்ள மக்கள் தண்ணீரை பயன்படுத்துவதால், நோய் பரவும் அபாயம்ஏற்பட்டுள்ளது.அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் படி, நீலகிரி ஆதிவாசி நல சங்கம் (நாவா) சார்பில், ஆய்வு நடத்தப்பட்டு, துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழையால், பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால்,பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.மக்கள் கூறுகையில், 'பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில், போராட்டம் நடத்தப்படும்,' என்றனர்.