கள்ளக்குறிச்சி: வானவரெட்டி வனப்பகுதியில் வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்ட ஜெ.ஜெ., வடிவ தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து பாசியை நீக்கி தினமும் தண்ணீர் நிரப்பிட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கே வேண்டும்.கள்ளக்குறிச்சி அடுத்த வானவரெட்டி பகுதியில் பல ஏக்கர் பரப்பில் மலைக்கோட்டாலம் காப்புக்காடு உள்ளது. இங்குள்ள மான்கள், குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்காக காட்டுப்பகுதியில் குட்டை வெட்டப்பட்டுள்ளது.அதில் மழைக்காலங்களில் சேரும் தண்ணீர் வன விலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. கோடை காலத்தில் தண்ணீர் வற்றிவிடும் நிலையில் வனவிலங்குகள் தண்ணீர் தேடி வனப்பகுதியிலிருந்து வெளியேறி விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளை நாடி வந்தன.இதனால், வனவிலங்குகள் கிணற்றில் விழுவதும் சாலைகளைக் கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டு இறந்தன.அதனையொட்டி கடந்த ஜெ., ஆட்சியில் வானவரெட்டி பகுதியில் உள்ள மலைக்கோட்டாலம் காப்புக்காட்டில் வன விலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக 'ஜெஜெ' வடிவில் இரண்டு அடி ஆழத்துடன் கூடிய சிமென்ட்டால் ஆன தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது.அதில் கள்ளக்குறிச்சி மாவட்ட வன அலுவலகம் சார்பில் நாள்தோறும் தண்ணீர் நிரப்பி பராமரித்து வந்தனர். இதனால் மான், குரங்குகள் போன்ற வனவிலங்குகளின் உயிரிழப்புகள் குறைந்தன.அத்துடன் சமூக விரோத கும்பலிடமிருந்து மான் போன்ற விலங்குகள் வேட்டையாடப்படுவதும் தவிர்க்கப்பட்டது.ஆனால், தற்போது 'ஜெஜெ' வடிவ தண்ணீர் தொட்டியில் குறைந்தளவு தண்ணீரே உள்ளது. அதுவும் இலை, தழைகள் விழுந்து பாசி படர்ந்துள்ளதால் விலங்குகள் அந்த தண்ணீரை பருகுவதில்லை. இதனால், வனவிலங்குகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.எனவே வானவரெட்டி வனப்பகுதியில் வினவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள 'ஜெஜெ' வடிவிலான தண்ணீர் தொட்டியை பராமரித்து நாள்தோறும் தண்ணீர் நிரப்ப வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.