| எப்பதாங்க ஒழியும் இந்த மார்க்கெட் கமிட்டி செஸ்! இரட்டை வரி செலுத்தி ஜவுளித்துறையினர் 'தஸ்புஸ்' Dinamalar
எப்பதாங்க ஒழியும் இந்த மார்க்கெட் கமிட்டி செஸ்! இரட்டை வரி செலுத்தி ஜவுளித்துறையினர் 'தஸ்புஸ்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 மே
2019
02:01

கோவை:'ஒரே நாடு... ஒரே வரி என்ற முழக்கத்தோடு, ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்ட பிறகும், குடோன்களில் இருப்பு வைத்து விற்கப்படும் பருத்திக்கு, ஒரு சதவீத மார்க்கெட் கமிட்டி செஸ் விதிக்கப்படுகிறது. இது பருத்தி வர்த்தகம் சார்ந்தோரை பாடாய்படுத்துகிறது' என்கின்றனர் அத்துறை சார்ந்தோர்.


தமிழ்நாடு ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தின் மூலம் பருத்தி விற்பனை செய்யப்படும்போது, அதன் கட்டமைப்பு வசதிக்காக, தமிழக வேளாண் துறையால், ஒரு சதவீத மார்க்கெட் கமிட்டி செஸ் வசூலிக்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் எங்கு இருப்பு வைக்கப்பட்டு பருத்தி விற்பனை செய்யப்பட்டாலும், இவ்வரி விதிக்கப்பட்டு வந்தது. ஜி.எஸ்.டி., அமலாக்கத்துக்கு பிறகும் அது தொடர்கிறது.


ஜவுளித்துறை சார்ந்தோர் சிலர் கூறியதாவது:வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வந்தோ, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோ, இங்கு பருத்தியை வியாபாரிகளால் விற்பனை செய்ய முடிவதில்லை. ஐந்து சதவீத ஜி.எஸ்.டி.,யோடு, ஒரு சதவீத செஸ் விதிக்கப்படுவதால், விலை கூடிவிடுகிறது. அதனால், வெளி மாநிலத்தில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், நேரடியாகவே பருத்தி வாங்க வேண்டியிருக்கிறது.


மதிப்புக்கூட்டும்போது, ஜி.எஸ்.டி.,யை உள்ளீட்டு வரியாக திரும்ப எடுப்பது போன்று, இந்த ஒரு சதவீத மார்க்கெட் கமிட்டி செஸ் வரியை, திரும்ப பெற இயலாது. பஞ்சு நுாலாக தயாரான பின், அதில் இருந்து வெளியேறும் கழிவுப்பஞ்சுக்கும், ஒரு சதவீத மார்க்கெட் கமிட்டி செஸ் விதிக்கப்படுகிறது.


அதாவது, ஏற்கெனவே வரி விதிக்கப்பட்ட பொருளுக்கு, மீண்டும் வரி விதிக்கப்படுகிறது. இந்த இரட்டை வரி விதிப்பை, தமிழக அரசு உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X