| குடிநீர் கேட்டு கிராம மக்கள் ஆவேசம்: ஒன்றிய அலுவலகம் முற்றுகை Dinamalar
குடிநீர் கேட்டு கிராம மக்கள் ஆவேசம்: ஒன்றிய அலுவலகம் முற்றுகை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 மே
2019
06:43

செஞ்சி : செஞ்சி அடுத்த மேல் ஒலக்கூர் கிராம மக்கள் குடிநீர் கேட்டு வல்லம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

வல்லம் அடுத்த மேல் ஒலக்கூர் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குடிநீர் பிரச்னையைத் தீர்க்க புதிதாக வெட்டிய இரண்டு திறந்த வெளி கிணறும் தண்ணீர் இன்றி வறண்டன.

நாளுக்கு நாள் குடிநீர் பற்றாக்குறை அதிகமானதால் கிராமத்தை சேர்ந்த தனி நபர்கள் இருவர் சொந்த ஏற்பாட்டின்பேரில், டேங்கர் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மேல் ஒலக்கூர் ஏரியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் திறந்த வெளி கிணறு வெட்டும் பணி சில தினங்களுக்கு முன் துவங்கியது.

இதற்கு கடுகப்பட்டு கிராம மக்கள், தங்கள் எல்லைக்குள் கிணறு வெட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து நேற்று காலை 11:00 மணிக்கு மேல் ஒலக்கூர் கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் வல்லம் பி.டி.ஓ. அலுவலகத்தை காலி கூடங்களுடன் முற்றுகையிட்டனர்.

உடன், பி.டி.ஓ., (திட்டம்) குலோத்துங்கன், ஏ.பி.டி.ஏ., சரவணக்குமார் ஆகியோர், முற்றுகையிட்ட கிராம மக்களிடம் பேச்சுவர்த்தை நடத்தினர்.

அதில், தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால் 27ம் தேதிக்கு பிறகு தீர்வு காணப்படும் என தெரிவித்தனர். இதை ஏற்காத கிராம மக்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

தகவல் அறிந்து வந்த டி.எஸ்.பி., நீதிராஜ் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் மீண்டும பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் 27ம் தேதிக்கு பிறகு சமாதான கூட்டம் நடத்தி குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் 12:30 மணிக்கு கலைந்து சென்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X