| அப்பாடா!ஒரு மாத காத்திருப்புக்கு விடை:கோவையில் மா.கம்யூ., திறந்தது கடை! Dinamalar
அப்பாடா!ஒரு மாத காத்திருப்புக்கு விடை:கோவையில் மா.கம்யூ., திறந்தது கடை!
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

24 மே
2019
02:43
பதிவு செய்த நாள்
மே 24,2019 00:38

கோவை:இந்திய அளவில் பெரும்பான்மை இடங்களை பிடித்திருக்கும் பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. அதே நேரத்தில், தமிழகத்தில், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி தோல்வியை சந்தித்திருக்கிறது. பெரிதும் எதிர்பார்த்த கோவை லோக்சபா தொகுதியில், சி.பி.எம்., கட்சியின் நடராஜன் வெற்றி பெற்றிருக்கிறார்.


மத்தியில் பா.ஜ., அரசு தொடரும் நிலையில், எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போகும் சி.பி.எம்., எம்.பி., நடராஜன், கோவையின் தொழில் வளர்ச்சிக்காக கொண்டு வரப்போகும் திட்டங்கள் குறித்து, தொழில்துறையினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கோவைக்கு குறிகோவை வழியாக தமிழகத்தில் கால் பதிப்பது என்பதுதான், பா.ஜ.,வின் திட்டம். பா.ஜ., தேசிய செயலரான முரளிதர் ராவ், கோவை தொழில் அமைப்பினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில், அதனை வெளிப்படையாகவே பேசினார்.


அந்த எண்ணத்திலேயே, பா.ஜ., தேசிய செயலர் முரளிதர் ராவ், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ., பிரதிநிதிகளான துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்... என, பல்வேறு பா.ஜ., மூத்த தலைவர்களும், கோவையை நோக்கி வரிசைக்கட்டி வந்தனர்.


தொழில்துறைக்கு தேவையான திட்டங்களை அறிவித்தனர்.ராணுவ தளவாட கண்காட்சி, ஜி.எஸ்.டி., கலந்துரையாடல் கூட்டம், சேம்பர் 90வது ஆண்டு துவக்க விழா, கொடிசியா பொன்விழா துவக்க விழா... இப்படி ஏதேனும் ஒரு காரணத்தை முன்வைத்து, தொழில் அமைப்பினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.


கோவை தொழில்முனைவோருக்கு, கப்பல் படை மற்றும் ரயில்வேக்கு, பொருட்கள் சப்ளை செய்யும் வாய்ப்புகளையும், மத்திய அரசு ஏற்படுத்தி கொடுத்தது.கோவையில் மத்திய அரசின், 'டிபென்ஸ் காரிடார்' கொண்டு வருவதாக அறிவித்ததுடன், கொடிசியா தொழிற்பூங்காவில் 'இன்னோவேஷன் மற்றும் இன்குபேஷன் சென்டர்' அமையும் என்றும் அறிவித்தனர்.ஜி.எஸ்.டி., பிரசாரம்கோவைக்கு தாங்கள் கொண்டு வந்த திட்டங்கள் வாக்குகளாக மாறும் என்ற நம்பிக்கையில், மத்திய கயிறு வாரியத்தலைவர் பொறுப்பில் இருந்த, முன்னாள் எம்.பி., சி.பி.ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்தனர்.


எதிர் தரப்பில் மா.கம்யூ,, சார்பில், முன்னாள் எம்.பி.,யான பி.ஆர்.நடராஜன் வேட்பாளர் ஆனார். தேர்தலில் பா.ஜ., அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி.,யே முக்கிய பேச்சுபொருளானது.நடராஜன் தனது பிரசாரத்தில், ஜி.எஸ்.டி.,யால் கோவையில் இயங்கி வந்த தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்ற கருத்தையே, பிரதானமாக முன்வைத்து பிரசாரம் செய்தார்.


பதிலுக்கு பா.ஜ., வேட்பாளர் ராதாகிருஷ்ணன், ஜி.எஸ்.டி.,யால் விளைந்த நன்மைகளை எடுத்துரைத்தார்.கோவையில் பிரசாரத்துக்கு வந்த, கம்யூ., தலைவர்களும், ஜி.எஸ்.டி.,யையே பிரதான விஷயமாக முன்வைத்தனர்.


கோவை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடியும் தனது பேச்சில், 'பா.ஜ., எப்போதும் சிறு, குறு தொழில்களை கைவிடாது. உங்களின் பிரச்னைகள் அனைத்தும், எங்களுக்கு புரிகிறது. அவை அனைத்தையும் சரிசெய்வோம்' என்றார்.வேட்பாளர்களுக்கு ஆதரவாக, தொழில் துறையில் சிலரும் இரு பிரிவாக பிரிந்து, பா.ஜ.,வுக்கு சிலரும், மா.கம்யூ.,க்கு சிலரும் ஆதரவாக களமிறங்கினர். இறுதியில், மா.கம்யூ.,வின் நடராஜனே வெற்றிவாகை சூடியிருக்கிறார்.நடராஜன் சாதிக்கணும்!கோவையை குறிவைத்து களமிறங்கிய பா.ஜ., தலைவர்கள், 'கோவையில் எங்கள் கட்சி சார்பில் மக்கள் பிரதிநிதி இருந்தால், உங்கள் பிரச்னைகளை டில்லிக்கு எளிதில் கொண்டு வந்து சேர்க்கலாம்' என்ற கருத்தைதான், பலமுறை சொல்லி வந்தனர். அக்கருத்து, தங்களுக்கு வாக்குகளை பெற்றுத்தரும் என்றும் நம்பினர். ஆனால் ஏனோ அந்த நம்பிக்கை வீணாகியுள்ளது.


அதே சமயத்தில், மத்தியில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமையவுள்ள நிலையில், தொழில் துறையினரின் தேவைகளை மத்திய அரசுக்கு எடுத்து சொல்லி, புதிய திட்டங்களை பெற்று வர, பா.ஜ., சார்பில் மக்கள் பிரதிநிதி மீண்டும் இல்லாமல் போனதும், தொழில் துறையினருக்கு பாதகமான விஷயம் என்றுதான் சொல்ல வேண்டும்.


ஆனாலும், தாங்கள் நம்பி ஓட்டளித்த, மா.கம்யூ.,வின் நடராஜன், மத்திய அரசிடம் போராடி கோவைக்கு நிறைய திட்டங்களை கொண்டு வர வேண்டும்; அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று, தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.அந்த சவால்களை எதிர்கொண்டு, மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு, கோவைக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து, தொழில்களை மேம்படைய செய்வதில்தான், நடராஜனின் சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது.


நடராஜன் சாதிப்பாரா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்!தாங்கள் நம்பி ஓட்டளித்த, மா.கம்யூ.,வின் நடராஜன், மத்திய அரசிடம் போராடி கோவைக்கு நிறைய திட்டங்களை கொண்டு வர வேண்டும்; அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று, தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X