புதுச்சேரி:என்.ஆர்.காங்., கோட்டையாக இருந்த தொகுதிகளில், காங்., வேட்பாளர் அதிக ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.
தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதியில், ரங்கசாமி 1991ம் ஆண்டு முதல் 4 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2011ல், தொகுதி மறு சீரமைப்பிற்கு பின் கதிர்காமம், இந்திரா நகர், தட்டாஞ்சாவடி என மூன்று தொகுதிகளாக மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மூன்று தொகுதியிலும் என்.ஆர்.காங்., வெற்றியை தக்க வைத்து வந்தது.தற்போதைய லோக்சபா தேர்தலில், கதிர்காமம் தொகுதியில் என்.ஆர்.காங். வேட்பாளர் நாராயணசாமி, 10,305 ஓட்டுக்கள் பெற்றார். காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு, 12,135 ஓட்டுக்கள் கிடைத்தது. இத்தொகுதியில் நாராயணசாமியை விட, 1830 ஓட்டுக்கள் வைத்திலிங்கம் அதிகம் பெற்றுள்ளார்.இந்திரா நகர் தொகுதியில், நாராயணசாமி 13,361 ஓட்டுக்களும், வைத்திலிங்கம் 11,887 ஓட்டுக்களும் பெற்றனர். இத் தொகுதியில், நாராயணசாமியை விட வைத்திலிங்கம் 1474 ஓட்டுக்கள் குறைவாக பெற்றுள்ளார்.கடந்த 28 ஆண்டுகளாக ரங்கசாமியின் கோட்டை என பெயர் பெற்ற தட்டாஞ்சாவடி தொகுதியில், என்.ஆர்.காங்., வேட்பாளர் 9194 ஓட்டுகளும், காங்., வேட்பாளர் 10532 ஓட்டுகளும் பெற்றனர். இங்கு, வைத்திலிங்கத்திற்கு, என்.ஆர். காங்., வேட்பாளரைவிட 1338 ஓட்டுகள் அதிகம் கிடைத்துள்ளது.ரங்கசாமியின் கோட்டைகளாக திகழ்ந்த இம்மூன்று தொகுதியிலும், ஓட்டு எண்ணிக்கை சரிந்துள்ளது, ரங்கசாமியின் செல்வாக்கை கேள்விக்குறியாக்கி உள்ளது.இதுமட்டும் இன்றி, தற்போது என்.ஆர்.காங்., கட்சியின் எம்.எல்.ஏ.வாக உள்ளவர்களின் தொகுதியிலும் காங்., கட்சிக்கு அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளது.
திருபுவனை தொகுதியில் என்.ஆர்.காங்., 11,260 ஓட்டுகளும், காங்., 14,050 ஓட்டுகள் பெற்றுள்ளன. காங்கிரசுக்கு. 2790 ஓட்டுகள் அதிகம் கிடைத்துள்ளது.மங்கலம் தொகுதியில் காங்., 14,941; என்.ஆர்.காங்., 12,939 ஓட்டுகள் பெற்றன. இந்த தொகுதியில் காங்., 2002 ஓட்டுகள் அதிகம் பெற்றுள்ளது.காரைக்கால் வடக்கு தொகுதியில் என்.ஆர்.காங்., வேட்பாளர் 6251 ஓட்டுகள் பெற்றார்.காங்., வைத்திலிங்கம் கூடுதலாக 7255 ஓட்டுகள் பெற்று மொத்தம் 13,506 ஓட்டுகள் பெற்றுள்ளார்.நெடுங்காடு தொகுதியில் என்.ஆர்.காங்., 6399 ஓட்டுகள் பெற்றுள்ளது. காங்., 16,254 ஓட்டுகள் பெற்று, என்.ஆர்.காங்., கட்சியை விட 9855 ஓட்டுகள் அதிகம் பெற்றுள்ளது.இவ்வாறு, என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளிலும், காங்., வேட்பாளர் வைத்தியலிங்கம் அதிக ஓட்டுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.