| முள்ளுப்பாடி ரயில்வே கேட் பகுதியில் பாலம்... தீவிரம்!அரைவட்ட இரும்பு பாலம் நிறுவியாச்சு Dinamalar
முள்ளுப்பாடி ரயில்வே கேட் பகுதியில் பாலம்... தீவிரம்!அரைவட்ட இரும்பு பாலம் நிறுவியாச்சு
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 மே
2019
23:54

பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலையில், முள்ளுப்பாடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுகிறது.


இதில், ரயில் தண்டவாளத்தை கடக்கும் பகுதியில், இரு கான்கிரீட் துாண்களுக்கு இடையே அரைவட்ட இரும்பு பாலம் நிறுவும் பணி நேற்று துவங்கியது.பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், ஆச்சிப்பட்டியில் இருந்து ஈச்சனாரி வரை, 26.85 கி.மீ., தொலைவுக்கு நான்கு வழி கான்கிரீட் சாலை, 451.90 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது.


இதில், முள்ளுப்பாடி ரயில்வே கேட், கிணத்துக்கடவு, ஒத்தக்கால்மண்டபம் மற்றும் ஈச்சனாரி ஆகிய இடங்களில் மேம்பாலமும் அமைக்கப்படுகிறது. கிணத்துக்கடவு மேம்பால பணிகள் நிறைவடைந்ததால், வாகன பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.முள்ளுப்பாடி ரயில்வே கேட் பகுதியில், 42 கோடி ரூபாய் செலவில், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி, கடந்த இருண்டு ஆண்டுளாக நடக்கிறது.இப்பாலத்தின் மேற்பகுதியில், 63.48 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம், 5.5 மீட்டர் உயரம் கொண்ட இரண்டு அரைவட்ட இரும்பு பாலம் அமைக்கப்படுகிறது.இதில், ஒரு அரைவட்ட வடிவத்தில், 500 டன் எடையுள்ள இரும்பு பாலம், கான்கிரீட் பாலத்தில் துாக்கி வைக்கப்பட்டது. கிரேன் உதவியுடன், இரும்பு 'கர்டர்' அமைக்கப்பட்டது.பாலத்தின் தென்பகுதியில், பொள்ளாச்சி நோக்கி அணுகுபாலம் ரோடு அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது.


அதேபோன்று, வடக்கு பகுதியில், கோவை நோக்கி அணுகுபாலம் அமைக்கும் பணி துரிதமாக நடக்கிறது.இந்நிலையில், ரயில்வே பாலம் பாதுகாப்பு உயரதிகாரி ரவீந்திரபாபு, தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட மேலாளர் உதயசங்கர், பாலக்காடு ரயில்வே கோட்ட பொறியாளர் அமிர்தலிங்கம், உதவி பொறியாளர் அஸ்வின்குமார் ஆகியோர் அனுமதியுடன், ராட்சத இரும்பு பாலம், 'ஜாக்கி' மூலமாக நகர்த்தப்பட்டு, கான்கிரீட் பாலத்தில் பொருத்தும் பணி துவங்கியது.


நேற்று முன் தினம் ரோட்டின் கிழக்கு பகுதியில் இருந்து இரண்டு பில்லர்களுக்கு இடையே அரை வட்ட இரும்பு பாலம் நகர்த்தி வைப்பதற்காக, ரயில் தண்டவாளம் கான்கிரீட் பில்லர் வரை இரும்பு கர்டர் வைக்கப்பட்டது.அதன்பின், அரைவட்ட பாலத்தின் அடியே 'ஹைட்ராலிக் ஜாக்கி' வைத்து பாலத்தை துாக்கி, மெதுவாக நகர்த்தி மேம்பாலத்தின் இரண்டு பில்லர்களுக்கு இடையே பொருத்தப்பட்டது.


இதனை தொடர்ந்து, அரை வட்ட பாலத்தின் அடியே கான்கிரீட் ரோடு அமைக்கப்படவுள்ளது. இதேபோல், மற்றொரு அரைவட்ட இரும்பு பாலம் கட்டப்பட்ட பின், அந்த பாலமும், இரண்டு பில்லர்களுக்கு இடையே நகர்த்தி வைக்கப்படும். இதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது.நேற்று முன் தினம் அரைவட்ட இரும்பு பாலம் நகர்த்தி வைக்கும்போது, போக்குவரத்து மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இதனால், வழக்கம்போல் தடைபடாமல் வாகனங்கள் சென்றது.- நிருபர் குழு -

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X