| 25 ஆண்டுக்கு பின் சூறைக்காற்று ருத்ரதாண்டவம்: வீடுகளின் மேற்கூரை, ஏராளமான மரங்கள் நாசம் Dinamalar
25 ஆண்டுக்கு பின் சூறைக்காற்று ருத்ரதாண்டவம்: வீடுகளின் மேற்கூரை, ஏராளமான மரங்கள் நாசம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 மே
2019
07:37

மேட்டூர்: மேட்டூர், கொளத்தூர் சுற்றுப்பகுதிகளில், 25 ஆண்டுக்கு பின், சூறைக்காற்று ருத்ரதாண்டவமாடியதால், ஏராளமான வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. மரங்கள், வேரோடு சாய்ந்தன.


மேட்டூர், கொளத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு, சுழல் காற்றுடன், 5.6 மி.மீ., மழை பெய்தது. மழை குறைவாக பெய்த போதும், காற்று பலமாக வீசியது. இதனால், மாதையன்குட்டை முதல் நவப்பட்டி வரை, மேட்டூர் கால்வாய் கரையோரமுள்ள, ஏராளமான கருவேல மரங்கள், வேரோடு சாய்ந்து, சாலை குறுக்கே விழுந்தன. இதனால், மின்கம்பங்கள் சேதமாகின. கால்வாய் கரையோர சாலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. மாதையன்குட்டை அரசு துவக்கப்பள்ளியில், மரம் முறிந்து கட்டடத்தின் மேல் விழுந்தது. இதில், குடிநீர் தொட்டி பறந்து, வளாகத்தில் விழுந்து சேதமானது. மேட்டூர் அணை வலதுகரை பகுதியில், பாறைகள் பெயர்ந்து, சாலையில் விழுந்தன. கொளத்தூர் சுற்றுப்பகுதியில் வீசிய காற்றால், கண்ணாமூச்சி ஊராட்சி, பூமனூர், மூலக்கடை, லக்கம்பட்டி ஊராட்சி, பெரியதண்டா சுற்றுப்பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. பூமனூர் பெரியநாயகி கோவில் செல்லும் சாலையின் குறுக்கே, ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால், ஆலயத்துக்கு காரில் சென்ற பலர், அதை அங்கேயே விட்டு, இருசக்கர வாகனங்களில் வீடுகளுக்கு புறப்பட்டுச்சென்றனர். நேற்று காலை, மரங்களை வெட்டி அகற்றிய பின், அவர்கள் தங்கள் கார்களை அங்கிருந்து ஓட்டிச்சென்றனர். மேலும், சூறைக்காற்றால் கருங்கரடு மாரியம்மன் கோவில் கோபுரத்தின், இரு கலசங்கள் விழுந்தன. 25 ஆண்டுக்கு பின், பலத்த காற்று வீசியதாக, மக்கள் தெரிவித்தனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X