திருத்தணி : திருத்தணி அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக, பணம் கேட்கும் ஊழியர்கள் மீது மொபைல்போன் மூலம் புகார் தெரிவிக்கலாம் என, நிர்வாகம் அறிவித்து துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது.திருத்தணி அரசு மருத்துவமனைக்கு தினமும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர். மேலும், 130க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் வேலை செய்யும் சில ஊழியர்கள், ஓபி சீட்டு, அட்மிஷன், கட்டு கட்டுவதற்கு, உள்நோயாளிகளுக்கு குளூக்கோஸ் ஏற்றுவதற்கும் பணம் கேட்பதாக புகார்கள் தொடர்ந்து வந்தது.இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனை வளாகம் மற்றும் சிகிச்சை பிரிவுகள் என, 10க்கும் மேற்பட்ட இடத்தில், ஊழியர்கள் பணம் கேட்டால் யாரும் கொடுக்க வேண்டாம். அதையும் மீறி கொடுக்கும் நோயாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, துண்டு பிரசுரம் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, திருத்தணி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஹேமாவதி கூறியதாவது:மருத்துவமனையில் சில ஊழியர்கள், நோயாளிகளிடம் பணம் கேட்பதாக புகார் வந்ததை தொடர்ந்து, துண்டு பிரசுரம் அடித்து, அனைத்து இடங்களிலும் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்.நோயாளிகள் யாரும் பணம் கொடுக்க அவசியம் இல்லை. பணம் கேட்கும் ஊழியர்கள் குறித்து, எங்களுக்கு, 90942 23799 என்ற மொபைல்போன் மூலம் புகார் தெரிவிக்கலாம். இதையும் மீறி, ஊழியர்களுக்கு நோயாளிகள் பணம் கொடுத்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.அரசு மருத்துவமனையில், அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.