சிவகங்கை:சிவகங்கை அருகே கூட்டுறவுபட்டியில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையில் ஏற்கனவே 6.60 லட்ச ரூபாய் கொள்ளை நடந்து 2 மாதம் ஆவதற்குள், நேற்றும் கதவை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இக்கடையில் சூப்பர்வைசர், விற்பனையாளர், பார் ஊழியர் 6 பேர் பணிபுரிகின்றனர். ஏப்., 29 அன்று இரவு கடை லாக்கரில் இருந்த 6.60 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதோடு, கடையில் இருந்த பீர் பாட்டில்களையும் உடைத்துவிட்டு சென்றனர். அங்கிருந்த சி.சி.டி.வி., கேமரா, சூப்பர்வைசர் அலைபேசிக்கு வரும் குறுந்தகவல் கருவியையும் சேதப்படுத்தினர்.
அதற்கு பின்னரும் டாஸ்மாக் நிர்வாகம் காட்டிற்குள் இயங்கும் கடையை மாற்றவில்லை. புதிதாக 'சிசிடிவி' கேமராவும் பொருத்தவில்லை. இதனால் நேற்று முன்தினம் இரவு 2 வது முறையாக மர்ம நபர்கள் கடை பூட்டை உடைத்து, ஷட்டர் வழியே கடைக்குள் சென்றுள்ளனர். லாக்கரில் பணம் இல்லாத நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பினர். நேற்று முன்தினம் மதுவிற்ற ரூ.1.50 லட்சத்தை விற்பனையாளர் எடுத்து சென்றதால், பணம் தப்பியது
.ஊழியர்கள் கூட்டு சதியா?
இக்கடையில் ஏற்கனவே கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சியும், சூப்பர்வைசரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்கும் முயற்சியும் நடந்துள்ளது.கடை மற்றும் பார் ஊழியர்கள் இருகோஷ்டிகளாக உள்ளனர். இவர்களில் சிலர் முன்விரோதத்தில் கொள்ளையர்களை ஏற்பாடு செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் சீராளன் விசாரித்து வருகிறார்.
கடை, ஊழியர்கள் மாற்றம் உண்டு
இது குறித்து சிவகங்கை டாஸ்மாக் மேலாளர் விஜயா கூறியதாவது: காட்டிற்குள் உள்ள கடையை நகர்பகுதிக்குள் மாற்றவும், இங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரையும் வெவ்வேறு கடைகளுக்கு மாற்றம் செய்ய அனுமதி கோரி, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர், மதுரை மண்டல முதுநிலை மேலாளருக்கு 'இ-மெயில்' மூலம் கோரிக்கை வைத்துள்ளோம். அனுமதி கிடைத்ததும் கடை மற்றும் ஊழியர்கள் மாற்றப்படுவர், என்றார்.