காரைக்குடி:காரைக்குடியில் பணியில் மெத்தமான இருந்த அதிகாரி குறித்து மாவட்ட எஸ்.பி.,க்கு தகவல் தெரிவித்த போலீசுக்கும்- இன்ஸ்பெக்டருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
காரைக்குடி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் பாலமுருகன். இவரது கட்டுப்பாட்டிலுள்ள சோமநாதபுரம் ஸ்டேஷன், கல்லுப்பட்டி- நாகவயல் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் கடந்த 8 ம் தேதி இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளனர்.இது குறித்து புகார் வந்தும் விசாரணை அதிகாரியான இவர் நேரடியாக விசாரணைக்கு செல்லவில்லை.
அதே போல கந்து வட்டி கொடுமையில் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பாதிக்கப்பட்டவர் புகார் கொடுத்தும் விசாரணைக்கு செல்லாமல் புகாரின் மீது வழக்கு பதிவு செய்ய தாமதம் செய்ததால் உண்மை நிலையை எஸ்.பி., தனிப்பிரிவு போலீஸ் தனுஷ், ஜெயச்சந்திரன் எஸ்.பி.,க்கு தகவல் தெரிவித்துள்ளார்.மேலிடத்திலிருந்து இன்ஸ்பெக்டருக்கு 'டோஸ்' விழுந்துள்ளது.
ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் பாலமுருகன் போட்டுக் கொடுத்த எஸ்.பி., தனிப்பிரிவு போலீசிடம் ஸ்டேஷன் வாசல் முன் கடுமையான வாக்குவாதம் செய்துள்ளார். இருவருக்கும் நடந்த கடுமையான வாக்குவாதத்தால் அதிர்ந்த சக போலீசார் இருவரையும் விலக்கி விட்டு சமாதானப்படுத்தி உள்ளனர்.
வாக்குவாத பிரச்னை எஸ்.பி., காதுக்கு செல்லவே ஸ்டேஷன் வாசலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள இருவரின் சண்டை காட்சிகளை எடுத்துக் கொண்டு அலுவலகத்திற்கு வருமாறு இருவருக்கும் உத்தரவிட்டுள்ளார்.