| கூட்டுறவுப்பட்டியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் Dinamalar
கூட்டுறவுப்பட்டியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
01:35

சிவகங்கை:அமைச்சர் பாஸ்கரன் தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கை அருகேயுள்ள கூட்டுறவுபட்டியில் ஒரு குடம் குடிநீரை 10 ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு குடிநீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது.



பொதுக்குழாயில் 2 நாட்களுக்கு ஒரு முறை வரும் உவர்ப்பு நீரை பிடிக்கவே பெண்கள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தனர்.சிவகங்கை ஒன்றியம் கண்டாங்கிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கூட்டுறவுபட்டி கிராமம், காலனியில் 630 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இது அமைச்சர் பாஸ்கரன் தொகுதிக்கு உட்பட்ட கிராமம் மட்டுமின்றி, அமைச்சரின் சொந்த ஊருக்கு அருகில் உள்ள கிராமம்.



நல்ல நீர்வரத்து காலங்களில் பொதுக்குழாய், வீட்டு குடிநீர் இணைப்பு மூலம் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்தனர். தற்போது வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடு, பொது குடிநீர் குழாய் இணைப்புகளை ஊராட்சி நிர்வாகத்தினர் துண்டித்து விட்டனர். மாறாக புதுக்கண்மாயில் அமைத்துள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து உவர்ப்பு நீர் எடுத்து வந்து, மேல்நிலை தொட்டி வழியாக வினியோகிக்கின்றனர்.



குடம் ரூ.10க்கு குடிநீர் வாங்கும் அவலம்



கூட்டுறவுபட்டி மெயின்ரோடு, ரேஷன் கடை, காலனி ஆகிய மூன்று இடங்களில் தலா 10 பொது குழாய்கள் அமைத்துள்ளனர். இங்கு 2 நாட்களுக்கு ஒரு முறை வினியோகம் செய்யும் உவர்ப்பு நீரை தான் வீட்டிற்கு 10 குடம் வீதம் பெண்கள் பிடிக்க வேண்டும். இந்த 10 குடத்தில் தான் 2 நாட்களில் அன்றாட தேவைகளை மக்கள் பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.



கடும் குடிநீர் தட்டுப்பாட்டில் தத்தளிக்கும் இக்கிராமத்தினர் வேறு வழியின்றி, சுத்திகரிப்பு செய்யாத, சுகாதாரமற்ற குடிநீரை தான் குடம் 10 ரூபாய் கொடுத்து வாங்குகின்றனர். இக் குடிநீரை பருகுவதால் வாந்தி, வயிற்று போக்கு ஏற்படும் அச்சமும் இக்கிராம மக்களிடம் நீடித்து வருகிறது.



கைகொடுத்த வெளிநாடு வாழ் இளைஞர்கள்




இக்கிராம மக்களுக்கு அரசு கை கொடுக்காததால், குடிநீர் பஞ்சத்தை போக்க மந்தைகருப்பர் கோயில் அருகே 2 லட்ச ரூபாய் செலவில் ஆழ்துளை கிணறு, மின்மோட்டார் பொருத்தி, தண்ணீர் எடுக்கின்றனர். இது தவிர புது கண்மாயில் ஊராட்சி சார்பில் போட்ட மின் மோட்டாரும் தரமில்லாமல் போனதால், அங்கும் 70 ஆயிரம் ரூபாய் செலவில் மின்மோட்டார் பொருத்தினர்.



இந்த செலவு முழுவதையும் சிங்கப்பூர், மலேசியாவில் வேலை பார்க்கும் கூட்டுறவுபட்டி இளைஞர்கள் நன்கொடையாக வழங்கினர்.



மக்கள் கருத்து:



450 அடிக்கு கீழ் சென்ற நிலத்தடி

நீர்கே.சந்திரபோஸ், கூட்டுறவுபட்டி:




கடும் வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் 450 அடி ஆழத்திற்கு கீழ் சென்றுவிட்டது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நல்ல குடிநீர் கூட கிடைக்காமல், உவர்ப்பு நீரை தான் வினியோகம் செய்கின்றனர். அமைச்சர் பாஸ்கரன் கூட்டுறவுபட்டியில் ஆய்வு செய்து நிலத்தில் எங்கு நீர்மட்டம் இருக்கிறது என கண்டறிந்து தந்தால் ஆழ்துளை கிணறு போட்டு தரப்படும் என கூறுகிறார்.



குடிநீரே பார்க்காத கிராமம் மட்டுமின்றி, உவர்ப்பு நீருக்கே போராடும் நிலை கூட்டுறவுபட்டிக்கு ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இக்கிராம இளைஞர்கள் அளித்த நிதி மூலம் ஓரளவிற்கு தண்ணீர் பிரச்னையை தீர்த்துள்ளோம்.



10 குடம் நீர் குடும்பத்திற்கு போதுமா


ஏ.கலா, கூட்டுறவுபட்டி:



ஒரு இடத்தில் 10 பொது குழாய் போட்டுள்ளனர். அதில் என்றைக்கு உவர்ப்பு நீர் வருதோ, அன்றைக்கு ஒவ்வொருவர் வீட்டில் இருந்தும் 10 குடம் மட்டுமே பிடிக்க வேண்டும். அதற்கு மேல் அந்த உவர்ப்புநீரும் கிடைக்காது. இந்த தண்ணீரை தான் சமையல், குளிக்க, கால்நடைகளை வளர்க்க பயன்படுத்துகிறோம். கரும்பு, தோட்டக்கலை பயிர்கள் விளைந்த இக்கிராமம் வறட்சி பாதித்த பகுதிபோல் காட்சி அளிக்கின்றன. இதனால் பெண்கள் தண்ணீருக்காக அல்லாடுகிறோம்.



கண்மாய்க்கு வராத பெரியாறு நீர்



எஸ்.பொன்னையா, கூட்டுறவுபட்டி :




பெரியாறு கால்வாய் நீரை சிவகங்கைக்கு அனுப்பும் போதே, கூட்டுறவுபட்டியில் உள்ள கண்மாய்களுக்கு நீர் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால் மாவட்ட நிர்வாகம் எங்கள் கோரிக்கையை கண்டு கொள்ளவில்லை. பெரியாறு கால்வாய் நீரில் தமறாக்கி, மலம்பட்டி விவசாயிகள் பயனடைந்தனர். கூட்டுறவுபட்டி பாதிக்கப்பட்டன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதித்து குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது, என்றனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X