கோவை : உ.பி., மாநிலத்தில் கடும் வெயிலுக்கு சுற்றுலா சென்ற கோவை, குன்னுாரை சேர்ந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 68 பேர் கடந்த 3 ம் தேதி தமிழகத்திலிருந்து ரயில் மூலம் வடமாநிலங்களுக்கு சுற்றுலா சென்றனர். இதில் பெரும்பாலனவர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்.உ.பி., யில் உள்ள வாரணாசி, ஆக்ரா பகுதியில் உள்ள கோவில் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு சென்று சுற்றிபார்த்தனர். இதன் பின்,நேற்று முன்தினம் ஆக்ராவில் இருந்து கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவை திரும்பி கொண்டிருந்தனர்.
இவர்களில் கோவை, ஒண்டிப்புதுார் நெசவாளர் காலனியை சேர்ந்த கலாதேவி, 58. இதே பகுதியை சேர்ந்த தெய்வானை , 74, நீலகிரி மாவட்டம் கேத்தி கொல்லி மலையை சேர்ந்த பச்சையா, 80, குன்னுார் ஓட்டுப்பட்டரையை சேர்ந்த சுப்பையா, 71, பாலகிருஷ்ணன் 67 ஆகியோர் ரயிலின் எஸ்-8 மற்றும் எஸ்-9 சாதாரண பெட்டியில் பயணம் செய்தனர்.
ஆக்ராவில் இருந்து புறப்பட்டதும் கடும் வெப்பத்தால் இவர்கள் சிரமப்பட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் திடீரென மயக்கமடைந்தனர். இத்தகவல் தெரிந்ததும் ரயில்வே அதிகாரிகள் ஜான்சி ரயில்வே ஸ்டேஷனில் டாக்டர்கள் குழு தயார் நிலையில் இருந்தனர். இருப்பினும், ரயில் ஜான்சி ரயில்வே ஸ்டேஷன் வந்தபோது குறிப்பிட்ட ஐந்து பேரில், மூவர் உயிரிழந்தது தெரியவந்தது. இருவர் மீட்கப்பட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது உயிரிழந்தனர். மற்றவர்கள் அதே ரயிலில் ஊர் திரும்ப, உயிரிழந்த ஐந்து பேரின் உறவினர்கள் மட்டும் அங்கே இருந்தனர். நேற்று ஐந்து பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
உயிரிழந்த குன்னுாரை் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் முரளிதரன் கூறுகையில்,''கடந்த 9 ம் தேதி என் தந்தை போனில் பேசினர். மேலும், வீட்டிற்கு வந்த பிறகு பிற விபரங்களை தெரிவிப்பதாகக் கூறினார். இந்நிலையில் இருவரும் கடும் வெப்பத்தால் உயிரிழந்ததாக தகவல் வந்துள்ளது,'' என்றார்.கடும் வெப்பம் உ.பி.,யில் உள்ள ஜான்சி பகுதியில் கடந்த சில நாட்களாக அதிகளவாக, 40 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவாகி வருகிறது.
அதிகபட்சமாக நேற்று முன்தினம், 48.1 டிகிரி வெயில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேற்றும், 48 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.இதனால், குளுமையான பகுதியிலிருந்த சென்ற நீலகிரி, கோவையை சேர்ந்தவர்கள் என்பதால் வெப்பத்தை தாங்க முடியாமல் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது.