| ரயில்வே சுரங்கப்பாதை தாமதத்தால் தெருக்களுக்குள் பாயும் வாகனங்கள் மின்கம்ப சேதத்தால் குடியிருப்போர் அச்சம் Dinamalar
ரயில்வே சுரங்கப்பாதை தாமதத்தால் தெருக்களுக்குள் பாயும் வாகனங்கள் மின்கம்ப சேதத்தால் குடியிருப்போர் அச்சம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
02:33

திண்டுக்கல்:திண்டுக்கல் - பழைய கரூர் ரோட்டில் ரயில்வே சுரங்கப்பாதை பணி ஆமை வேகத்தில் நடப்பதால், வாகன ஓட்டிகள் காந்திஜி நகரின் குறுகலான ரோட்டில் விரைகின்றனர்.


போக்குவரத்து நெருக்கடியால் வாகனங்கள் மின்கம்பங்களை இடித்து சேதப்படுத்துவதால் குடியிருப்போர் அச்சம் அடைந்துள்ளனர்.திண்டுக்கல் எம்.வி.எம்., நகர், கூட்டுறவு நகர், என்.எஸ்.நகர், நந்தவனப்பட்டி, எரியோடு, கோவிலுார், ஜி.டி.என்.,நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் திண்டுக்கல் நகர் பகுதிக்கு வர பழைய கரூர் ரோடு உள்ளது.




இதில் பழநி - திண்டுக்கல் ரயில் பாதை குறுக்கிடுவதால், சுரங்கப் பாதைக்காக கடந்த 8 மாதங்களுக்கு முன் பணிகள் துவங்கின. ஆமை வேகத்தில் நடப்பதால், இந்த ரோட்டில் செல்ல வேண்டிய வாகனங்கள் காந்திஜி நகர், கூட்டுறவுநகர் வழியாக வந்து, திருச்சி மேம்பாலம் வழியாக செல்கின்றனர்.சீலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட காந்திஜி நகர் பகுதியில் ரோடு 20 அடி அகலம் உள்ளது.




குறுகிய சாலையில் எதிரெதிர் வாகனங்கள் வரும்போது, பக்கவாட்டில் உள்ள வீடுகளின் வாசல்களையும், சுவர்களையும் இடித்து கொண்டு செல்கின்றன. பள்ளம், மேடான ரோட்டில் துாசி கிளம்புவதால் வயதானோர் மூச்சு திணறலுக்கு ஆளாகின்றனர்.காலை நேரத்தில் அதிக அளவில் வாகனங்கள் செல்லும்போது கடும் நெருக்கடி ஏற்படுகிறது. நேற்று கார் ஒன்று ரோட்டோரத்தில் இருந்த அடிபம்பை இடித்து, மின்கம்பத்தின் மீதும் மோதியது. இதில் மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமாகி கம்பம் விழும் நிலையில் உள்ளது.




மின்வாரியத்தினர் கம்பம் விழாதவாறு கயிற்றால் கட்டியுள்ளனர். இரவு நேரமாக இருந்திருந்தால் மின்கம்பம் விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.இதுகுறித்து காந்திஜி நகர் எம்.ராஜா கூறியதாவது: இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி வாகனங்கள் செல்லவே ரோடு போதுமானதாக இல்லை. இந்நிலையில் அனைத்து பகுதி வாகனங்களும் குறுகலான இந்த ரோட்டில் செல்வதால், வீடுகளில் வசிக்க முடிவதில்லை. பலர் வீட்டை காலி செய்து விட்டனர். ரயில்வே நிர்வாகம் சுரங்கபால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X