புதுச்சேரி: புதுச்சேரியில் விபத்துக்களை தடுக்க சென்டர் மீடியன் இடைவெளிகளில் போலீசார் அமைத்துள்ள பேரிகார்டுகளை அகற்றிவிட்டு, வாகனங்கள் குறுக்கே செல்ல வாய்ப்பிருப்பதால், நிரந்தர தீர்வாக சிமெண்ட் கட்டை அமைத்து மூட வேண்டும்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விபத்து உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமையே. அவசரமாக செல்ல வேண்டும் என நினைத்து போக்குவரத்து விதிகளை மதிக்காமல், சாலையின் நடுவில் உள்ள இடைவெளிகளை பயன்படுத்தி குறுக்கே செல்வதால் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இதனால், ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுவதுடன், உடல் ஊனம் ஏற்படுகிறது. விபத்துக்களை தடுப்பதிற்காக கடந்த சில மாதத்திற்கு முன்பு புதுச்சேரி சாலைகளை ஆய்வு செய்த டில்லி சாலை பாதுகாப்பு குழு மற்றும் சீனியர் எஸ்.பி. ராகுல்அல்வால், சாலையின் சென்டர் மீடியனில் தேவையற்ற இடங்களில் உள்ள இடைவெளிகளில் வாகனங்கள் குறுக்கிடும்போது விபத்து ஏற்படுவதை தடுக்க இடைவெளிகளை மூட முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, விபத்து ஏற்படும் இடங்களாக அடையாளம் நுாறடிச்சாலை காமாட்சி ஓட்டல் எதிரில் சாலை நடுவில் உள்ள இடைவெளி வழியாக பூமியான்பேட்டை மற்றும் காராமணிக்குப்பத்தில் இருந்து வரும் வாகனங்கள் சாலையின் குறுக்கே செல்வதால் விபத்துக்கள் அதிக அளவில் ஏற்பட்டது.
தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து வரும் வாகனங்கள் கோரிமேடு சாலை பட்டேல் பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள இடைவெளி வழியாக குறுக்கே செல்வதால் விபத்து ஏற்பட்டது. இதுபோல், இ.சி.ஆர். சாலையில் எம்.வி.ஆர். மருத்துவமனை அருகில் உள்ள சென்டர் மீடியன் இடைவெளி வழியாக கிருஷ்ணா நகர் மற்றும் மகாவீர் நகரில் இருந்து வரும் வாகனங்கள் குறுக்கே செல்வதால் ஏராளமான விபத்து ஏற்படுவதுடன், சமீபத்தில் நடந்த விபத்தில் உயிரிழப்பும் ஏற்பட்டது. இதனால் நெல்லித்தோப்பு அண்ணா நகர், காமாட்சி ஓட்டல், இ.சி.ஆர். சாலை எம்.வி.ஆர். மருத்துவமனை அருகிலும், கோரிமேடு சாலை பட்டேல் பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள சென்டர் மீடியன் ஒபன் (இடைவெளி) போக்குவரத்து போலீசார் பேரிகார்டுகள் மூலம் மூடி தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். போலீசாரின் நடவடிக்கை வரவேற்கதக்கது. ஆனால், சிலர் அந்த பேரிகார்டுகளை அகற்றி விட்டு திடீரென, சாலையின் குறுக்கே வாகனங்களில் வருவதால், சென்டர் மீடியன் இடைவெளி மூடியுள்ளதாக நினைத்து வேகமாக வரும் வாகனம் மோதி விபத்தில் சிக்கி கொள்கின்றன. சென்டர் மீடியன் ஒபன்களை மூட வேண்டும் என முடிவு எடுத்தால், அவற்றை முழுமையாக சிமெண்ட் கட்டைகள் அமைத்து இடைவெளிகளை மூட வேண்டும். இப்படி தற்காலிகமான முறையில் பேரிகார்டுகளை வைத்து மூடி வைத்திருப்பது, ஏற்கனவே நடந்த விபத்தை விட அதிக விபத்துக்களை ஏற்படுத்தும். எனவே, நிரந்த தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.