| ஹெல்மெட் அணியாத போலீசாருக்கு சிக்கல் ஒழுங்கு நடவடிக்கையால் அச்சம் Dinamalar
ஹெல்மெட் அணியாத போலீசாருக்கு சிக்கல் ஒழுங்கு நடவடிக்கையால் அச்சம்
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

12 ஜூன்
2019
05:04
பதிவு செய்த நாள்
ஜூன் 12,2019 04:03

மதுரை:மதுரை நகரில் ஹெல்மெட் அணியாத போலீசார் மீது வழக்குப்பதிவு செய்வதுடன் அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் அச்சத்தில் உள்ளனர்.



தமிழகத்தில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் போலீசாரில் பலர் ஹெல்மெட் அணிவதில்லை சமீபத்தில் ஹெல்மெட் குறித்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்தது. இதைதொடர்ந்து தமிழகம் முழுவதும் மீண்டும் ஹெல்மெட் வழக்குகள் பதிவு செய்வது சூடுபிடித்தது.



வழக்குப்பதிவு செய்யும் போலீசார், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். நகரில் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுபடி, ெஹல்மெட் அணியாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த இரு வாரங்களில் 17 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.




'நானும் போலீசு, நீயும் போலீசு... என் மேலேயே வழக்கு போடலாமா' எனஹெல்மெட் அணியாத போலீசார் வாக்குவாதம் செய்தால் அதுகுறித்து பெயர், போலீஸ் எண் போன்றவை யுடன் அலைபேசி வீடியோவில் பதிவு செய்து உயர் அதிகாரிகளுக்கு உடனே அனுப்பப்படுகிறது.



போக்குவரத்து துணை கமிஷனர் அருண்பாலகோபாலன் கூறுகையில், ''இந்தாண்டு ஹெல்மெட் அணியாத போலீசார் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.


ஹெல்மெட் வழக்கு எவ்வளவு



ஹெல்மெட் அணியாததற்காக இந்தாண்டில் மே வரை 60,132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 60 லட்சத்து 18 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்தாண்டு 1,33,850 வழக்குகள் பதிவு செய்ததுடன், ஒரு கோடியே 33 லட்சத்து 88 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து விதிமீறலுக்காக இந்தாண்டு மே வரை 1,38,265 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X