மதுரை:மதுரை மாநகராட்சியில் 15 ரவுண்டானாக்களை இரு ஆண்டுகள் பராமரிக்கும் பொறுப்பை வங்கி, தனியார் நிறுவனங்கள் ஏற்க முன்வந்துள்ளன.
முக்கிய சந்திப்புகளில் ரவுண்டானாக்கள் உள்ளன. செலவுகளை குறைக்க பராமரிப்பு பணிகளை வங்கி மற்றும் தனியார் வசம் ஒப்படைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், அனுப்பானடி பஸ் டெர்மினல், குலமங்கலம், சிம்மக்கல், விளக்குத்துாண், பாத்திமா கல்லுாரி ஆலமரத்து ஸ்டாப் ரவுண்டானா உட்பட 15 ரவுண்டானாக்கள் ஒப்படைக்கப்பட உள்ளன.
கமிஷனர் விசாகன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் 13 வங்கி நிறுவனங்கள், 5 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. ரவுண்டானாக்களை பராமரிக்க ஆகும் செலவுகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நிறுவன அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
மாநகராட்சி பொறியாளர் ஒருவர் கூறுகையில், 'பொறுப்பை ஏற்கும் நிறுவனங்கள் ரவுண்டானாக்களில் அழகுச்செடிகள் மூலம் பூங்கா அமைக்க வேண்டும். நீரூற்று, விளக்குகளை பராமரிக்க வேண்டும். ரவுண்டானா ஒன்றை பராமரிக்க ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையாகும்,'' என்றார்.