மடத்துக்குளம்:மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட் நுழைவுவாயில் பகுதியில், ஆக்கிரமிப்பு உள்ளதால் பஸ்கள் சென்று திரும்ப சிரமமாக உள்ளதுமடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட் திறந்த வெளி நிறுத்தமாக இருந்தது. கடந்த 1998 ல் புதிய கட்டமைப்பாக உருவாக்கப்பட்டது. பின், 2009 ல் தனி தாலுகாவாக செயல்பட தொடங்கிய பின், போக்குவரத்தும், பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்தது.தற்போது, 50க்கும் மேற்பட்ட கிராமங்களின் மையமாக உள்ளதோடு, தினசரி பல ஆயிரக்கணக்கான மக்கள் பயணத்திற்கு பயன்படுகிறது.
புறநகர் பஸ்கள் தேசிய நெடுஞ்சாலை ஓரம் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி சென்றாலும், டவுன்பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள், வந்து திரும்புகின்றன.ஆனால், பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயிலில் ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் உள்ளன. ரோட்டின், இருபுறமும் இப்படி உள்ளதால், 20 அடி வரை ரோடு ஆக்கிரமிப்பு உள்ளது. கடைகளின் முன்பு, வாகனங்களும், பார்க்கிங் செய்யப்படுகிறது. மீதமுள்ள சிறிய, குறுகலான இடத்தில் பஸ்கள் சென்று திரும்புகின்றன. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றினால், பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் அகலமாகி பஸ் சென்று, திரும்ப சுலபமாக இருக்கும. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.